ஸ்கூட்டர் மீது லாரி மோதியதில் தாய் - மகன் பலி
ஹாசன் டவுனில் ஸ்கூட்டர் மீது லாரி மோதிய விபத்தில் தாய் - மகன் பலியானார்கள். மகனை பள்ளிக்கூடத்திற்கு அழைத்துச் சென்றபோது இந்த பரிதாப சம்பவம் நேர்ந்துள்ளது.
ஹாசன்: ஹாசன் டவுனில் ஸ்கூட்டர் மீது லாரி மோதிய விபத்தில் தாய் - மகன் பலியானார்கள். மகனை பள்ளிக்கூடத்திற்கு அழைத்துச் சென்றபோது இந்த பரிதாப சம்பவம் நேர்ந்துள்ளது.
தாய் - மகன்
ஹாசன் (மாவட்டம்) டவுன் ஆர்.டி.ஓ. சாலையில் வாடகை வீட்டில் வசித்து வந்தவர் சீமா(வயது 32). இவரது கணவர் வினோத் ராணுவ வீரர் ஆவார். தற்போது அவர் குஜராத்தில் உள்ள ராணுவ முகாமில் பணியாற்றி வருகிறார். இவர்களது மகன் மயூர்(10). தற்போது இந்த சிறுவன் ஹாசன் டவுன் அரிசிகெரே சாலையில் உள்ள மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் படித்து வந்தான். இவர்களது சொந்த ஊர் குடகு மாவட்டம் சனிவாரசந்தே அருகே உள்ள கெரேகோடு கிராமம் ஆகும்.
மயூரின் படிப்புக்காக அவர்கள் ஹாசனில் வசித்து வந்துள்ளனர். தினமும் காலையில் சீமா, தனது மகன் மயூரை பள்ளிக்கு அழைத்து சென்று விடுவதையும், பின்னர் பள்ளி முடிந்ததும் வீட்டுக்கு அழைத்து வருவதையும் வாடிக்கையாக கொண்டிருந்தார். இதற்காக அவர் ஒரு பேட்டரி ஸ்கூட்டரை ஓட்டி வந்தார்.
லாரி மோதல்
அதன்படி நேற்று காலையில் வழக்கம்போல் சீமா, தனது மகன் மயூரை தன்னுடைய பேட்டரி ஸ்கூட்டரில் அழைத்து கொண்டு வீட்டில் இருந்து பள்ளிக்கு புறப்பட்டார். அவர் தனது மகனுடன் ஸ்கூட்டரில் ஹாசன் டவுன் அரிசிகெரே சாலையில் உள்ள பி.டி.கொப்பலு பகுதியில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவருக்கு பின்னால் வந்த ஒரு லாரி, எதிர்பாராத விதமாக அவரது ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் ஸ்கூட்டரில் இருந்து தூக்கி வீசப்பட்ட சீமாவும், மயூரும் படுகாயம் அடைந்தனர். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அவர்கள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இதுபற்றி அறிந்த ஹாசன் டவுன் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
டிரைவர் கைது
அவர்கள் சீமா மற்றும் மயூரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ]
மேலும் இதுபற்றி வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.