தாய்-குழந்தை உயிரிப்பு: போலீஸ் தரப்பில் குற்றப்பத்திரிகை தயார்
மெட்ரோ தூண் அமைப்பதற்காக கட்டப்பட்டு இருந்த இரும்பு தூண் சரிந்து விழுந்து தாயும், குழந்தையும் இறந்த விவகாரத்தில் போலீசார் குற்றப்பத்திரிகையை கோர்ட்டில் தாக்கல் செய்தனர்.
பெங்களூரு:-
மெட்ரோ பணிகள்
பெங்களூரு கோவிந்தபுரா பகுதியில் மெட்ரோ பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த பகுதியில் கடந்த ஜனவரி மாதம் 11-ந் தேதி மெட்ரோ தூண்கள் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. அப்போது நாகவாரா பகுதியை சேர்ந்த ஐ.டி.ஊழியர் தனது மனைவி மற்றும் 2½ வயது குழந்தை
ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் சென்றார்.
அவர்கள் அந்த பகுதி வழியாக சென்றபோது திடீரென மெட்ரோ தூண் அமைப்பதற்காக அங்கு கட்டப்பட்டு இருந்த இரும்பு தூண் சரிந்து விழுந்தது. அதில் அவரது மனைவி தேஜஸ்வினி(வயது 28), 2½ வயது குழந்தை ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து கோவிந்தபுரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குற்றப்பத்திரிகை தயார்
இந்த கோர சம்பவம் குறித்து ஐ.ஐ.டி. உள்ளிட்ட குழு ஆய்வு நடத்தினர். மேலும் அதுதொடர்பாக அறிக்கையும் தயார் செய்தனர். இந்த நிலையில் ஆய்வு குழு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி கோவிந்தபுரா போலீசார் குற்றப்பத்திரிகையை தயார் செய்தனர். அதில் மெட்ரோ தூண் விழுந்து தாய்-குழந்தை உயிரிழந்த சம்பவம் தொடர்பாக கள என்ஜினீயர், காண்டிராக்டர், ஊழியர்கள், அதிகாரிகள் என 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணை தொடர்பாகவும் குற்றப்பத்திரிகை தயாரிக்கப்பட்டுள்ளதாக போலீசார் கூறி உள்ளனர். குற்றப்பத்திரிகையை விரைவில் போலீசார் கோர்ட்டில் தாக்கல் செய்வார்கள் என கூறப்படுகிறது. அதன்பின்னர், விபத்துக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.