கள்ளக்காதலன் மிரட்டியதால் 4 குழந்தைகளின் தாய் தூக்குப்போட்டு தற்கொலை
ஆபாச வீடியோவை வெளியிடுவதாக கள்ளக்காதலன் மிரட்டியதால் 4 குழந்தைகளின் தாய் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
பெங்களூரு:
பெங்களூரு கோரமங்களா பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவர் மற்றும் 4 குழந்தைகளுடன் வசித்து வந்தார். அந்த பெண் கோரமங்களா பகுதியில் அழகு நிலையத்தில் வேலை செய்து வந்தார். இவருக்கும், ஆந்திர மாநிலத்தை சேர்ந்த மல்லிகார்ஜுன் என்பவருக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதையடுத்து இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர். அவரிடம், அந்த வாலிபர் அடிக்கடி பணம் வாங்கி வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு ரூ.2 லட்சம் கொடுக்கும்படி அந்த பெண்ணிடம் வாலிபர் கேட்டுள்ளார். ஆனால், அதற்கு அந்த பெண் மறுத்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர், தனிமையில் உல்லாசமாக இருந்த வீடியோவை அந்த பெண்ணிடம் காண்பித்து, பணம் கொடுக்காவிட்டால் சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதாக மிரட்டி உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண், தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து கோரமங்களா போலீசார் வழக்குப்பதிவு செய்து மல்லிகார்ஜுனை வலைவீசி தேடி வருகிறார்கள்.