அரசு போக்குவரத்து கழகங்களுக்கு மோட்டார் வாகன வரி விலக்கு
கர்நாடக அரசு போக்குவரத்து கழகங்களுக்கு மோட்டார் வாகன வரி விலக்கு அளிக்க கர்நாடக மந்திரிசபை முடிவு செய்துள்ளது.
பெங்களூரு:-
மந்திரிசபை கூட்டம்
கர்நாடக மந்திரிசபை கூட்டம் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையில் நேற்று பெங்களூருவில் நடைபெற்றது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து சட்டத்துறை மந்திரி மாதுசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
கர்நாடகத்தில் அரசு போக்குவரத்து கழகங்களுக்கு மோட்டார் வாகன வரி விலக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் போக்குவரத்து கழகங்கள் 2022-23-ம் ஆண்டு அரசுக்கு செலுத்த வேண்டிய ரூ.169 கோடி வரி செலுத்த தேவை இல்லை. ரூ.454 கோடியில் விஜயநகாில் ஹம்பி சர்க்கரை ஆலை அமைக்கப்படும். அதற்கு 82 ஏக்கர் நிலம் ஒதுக்கப்படும்.
கூடுதல் நிதிச்சுமை
அரசு ஊழியர்களுக்கு 17 சதவீத சம்பள உயர்வுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதனால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.7,246 கோடி கூடுதல் நிதிச்சுமை ஏற்படும். தட்சிண கன்னடா மாவட்டத்தில் ஏற்றுமதி மையம் அமைக்கப்படும்.
கினிகேரா-ராய்ச்சூர், துமகூரு-ராயதுர்கா, பாகல்கோட்டை-குடசி, சிக்கமகளூரு-பேளூர் புதிய ரெயில் பாதை அமைக்கும் திட்டத்திற்கு கர்நாடகத்தின் பங்குத்தொகை ரூ.964 கோடி விடுவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கிராமங்களில் தொலைபேசி சேவையை வழங்க சிக்னல் வழங்கும் டவர்கள் அமைக்கப்படும். இதற்காக கிராமங்களில் தலா 2 ஆயிரம் சதுர அடி நிலம் ஒதுக்கப்படும். கலபுரகியில் உயர்தரமான பட்டுக்கூடு சந்தை நிறுவப்படும்.
இவ்வாறு மாதுசாமி கூறினார்.