கனடா நாடாளுமன்றத்தில் கன்னடத்தில் பேசி அசத்திய எம்.பி.- பசவராஜ் பொம்மை உள்பட தலைவர்கள் பாராட்டு


கனடா நாடாளுமன்றத்தில் கன்னடத்தில் பேசி அசத்திய எம்.பி.-  பசவராஜ் பொம்மை உள்பட தலைவர்கள் பாராட்டு
x

கனடா நாடாளுமன்றத்தில் கன்னடத்தில் பேசிய எம்.பி.க்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உள்பட தலைவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

பெங்களூரு: கனடா நாடாளுமன்றத்தில் கன்னடத்தில் பேசிய எம்.பி.க்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உள்பட தலைவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

அனுமதி கிடைத்தது

கனடா நாட்டின் தேர்தலில் விடுதலை கட்சி சார்பில் போட்டியிட்டு எம்.பி.யாக தேர்ந்து எடுக்கப்பட்டவர் சந்திர ஆர்யா. கர்நாடகத்தை சேர்ந்த இவர், கனடா நாடாளுமன்றத்தில் தனது தாய்மொழியான கன்னடத்தில் பேசி அசத்தியுள்ளார். அவரது பேச்சு அடங்கிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானது. கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் சிரா தாலுகாவில் உள்ள துவரலு கிராமத்தை சேர்ந்தவர்.

இவரது தந்தை கோவிந்த அய்யர், வணிக வரித்துறை உதவி கமிஷனராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். அவரது பெற்றோர் இன்னும் சொந்த கிராமத்தில் தான் வசித்து வருகிறார்கள். சந்திர ஆர்யா எம்.பி. கனடா நாடாளுமன்றத்தில் பேசும்போது, "இந்த சபையில் கன்னடத்தில் பேச அனுமதி கிடைத்தது பெருமையாக உள்ளது. இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் பிறந்து கனடாவில் எம்.பி.யாக தேர்ந்து எடுக்கப்பட்டு கன்னடத்தில் பேசியது என்பது 5 கோடி கன்னடம் பேசும் மக்களுக்கு பெருமை அளிக்கும் விஷயம் ஆகும்" என்றார்.

பாராட்டுகள் குவிகின்றன

அதைத்தொடர்ந்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், "கனடா நாடாளுமன்றத்தில் எனது தாய்மொழி கன்னடத்தில் பேசினேன். இந்தியாவுக்கு வெளியே வெளிநாட்டு நாடாளுமன்றத்தில் முதல் முறையாக கன்னடத்தில் பேசப்பட்டுள்ளது" என்றார். கன்னடத்தில் பேசிய அவரை பாராட்டி முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தனது டுவிட்டர் பதிவில் வெளியிடப்பட்ட பதிவில், "சந்திர ஆர்யா கனடா நாடாளுமன்றத்தில் கன்னடத்தில் பேசி தாய்மொழிக்கு பெருமை சோ்த்துள்ளார். அவரை இதய பூர்வமாக பாராட்டுகிறேன். அவர் எப்போதும் தனது வேரை நினைவு கூற வேண்டும். எங்காவது இரு, எப்படியாவது இரு எப்போதும் கன்னடராக இரு" என்று பதிவிட்டுள்ளார்.

தொழில்துறை மந்திரி முருகேஷ் நிரானி, கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் உள்ளிட்டோர் அவருக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர். மேலும் சமூக வலைத்தளங்களில் சந்திர ஆர்யாவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.


Next Story