தொழிலதிபர் முகேஷ் அம்பானிக்கு இசட் பிளஸ் பிரிவு பாதுகாப்பு..!
உளவுத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து தொழிலதிபர் முகேஷ் அம்பானிக்கு இசட் பிளஸ் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
புதுடெல்லி,
நாட்டில் முக்கிய அரசியல் தலைவர்கள், பிரபலமானவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு அவர்களுக்கு இசட் பிளஸ், இசட், ஒய் பிளஸ், ஒய், எக்ஸ் வகையான பாதுகாப்புகள் வழங்கப்படுகிறது.
இதில் இசட் பிளஸ் பிரிவு பாதுகாப்பு தான் மிகவும் உயர்ந்த பாதுகாப்பு ஆகும். 10 கமாண்டோ படையினர் உட்பட 55 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர்.
இந்தியாவில் தற்போது இசட் பிளஸ் பிரிவு பாதுகாப்பு மத்திய மந்திரி அமித்ஷா, உத்தரப்பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், மத்திய மந்திரிகள் உள்ளிட்ட சிலருக்கு வழங்கப்படுகிறது.
இந்த நிலையில், ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவரும், தொழிலதிபருமான முகேஷ் அம்பானிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.உளவுத்துறை கொடுத்த தகவலின் அடிப்படையில் இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
முன்னதாக, முகேஷ் அம்பானிக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது. கடந்த ஆண்டு முகேஷ் அம்பானியின் வீட்டிற்கு வெளியில் வெடிகுண்டு நிரப்பப்பட்ட கார் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வெடிகுண்டை வைத்தது தொடர்பாக போலீஸ் அதிகாரி சச்சின் வாஸ் உட்பட பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவத்திற்குப் பிறகு அம்பானியின் இல்லத்திற்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. முகேஷ் அம்பானியின் குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.