முல்லைபெரியாறு விவகாரம்: தமிழகத்தின் அனுமதியும் தேவை - மத்திய அரசு
முல்லைபெரியாறு அணை அருகே புதிய அணை கட்ட தமிழகம் - கேரள அரசுகளின் சம்மதம் தேவை என மாநிலங்களவையில் மத்திய அரசு பதில் அளித்துள்ளது.
புதுடெல்லி,
தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் விவசாய மற்றும் குடீநீர் தேவைக்கு ஆதாரமாக விளங்குவது முல்லை பெரியாறு அணை. இந்த அணை மிகவும் பழமையானது என்பதால் இந்த அணையின் பாதுகாப்பு இல்லை என்று கூறி இந்த அணையின் கீழ் பகுதியில் புதிய அணை ஒன்றை கட்ட கேரள அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதுதொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது.
இந்நிலையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தற்போது நடந்து வரும் நிலையில் முல்லை பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. கேரளாவை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் பிரிட்டார்ஸ் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த மத்திய நீர்வளத்துறை அமைச்சகம், முல்லைப் பெரியாறு அணையின் கீழே புதிய அணை கட்டுவதற்கு தமிழ்நாடு-கேரளா என இரண்டு மாநில அரசுகளின் சம்மதம் தேவை. 2014ம் ஆண்டு முல்லைப் பெரியாறு வழக்கில் சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பை மேற்கோள்காட்டி மாநிலங்களவையில் மத்திய அரசு தெளிவுபடுத்தி உள்ளது.
முல்லைப் பெரியாறு அணையின் கீழ் புதிய அணை கட்ட வேண்டும் என்றால் இரண்டு மாநில அரசுகளின் சம்மதம் இருந்தால் மட்டுமே மத்திய அரசு அணை கட்டுவதற்கான சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கும் என்று எழுத்துப்பூர்வமாக பதிலளித்தது.