இரும்பு கம்பியால் தாக்கி தந்தை-தாய் படுகொலை
பெங்களூரு பேடராயனபுராவில் இரும்பு கம்பியால் தாக்கி தந்தை, தாயை கொலை செய்த பயங்கரம் நடந்துள்ளது. தலைமறைவாகி விட்ட வாலிபரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
பெங்களூரு:-
ஓட்டலில் காசாளர் வேலை
பெங்களூரு பேடராயனபுரா அருகே சவுதேமண்டி பகுதியில் வசித்து வந்தவர் பாஸ்கர்(வயது 61). இவரது மனைவி சாந்தா(60). இந்த தம்பதிக்கு சச்சின் மற்றும் சரத் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். ஓட்டல் ஒன்றில் பாஸ்கர் காசாளராக வேலை பார்த்து வந்தார். சாந்தா மத்திய அரசு ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்று விட்டார். தின்ட்லு பகுதியில் சச்சின் வசித்து வருகிறார்.சரத் மட்டும் பாஸ்கர், சாந்தாவுடன் தங்கி இருந்தார். பாஸ்கர் தம்பதியின் சொந்த ஊர் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு ஆகும். கடந்த 12 ஆண்டுகளாக பேடராயனபுரா அருகே அவர்கள் குடும்பத்துடன் வசித்து வந்தனர். சரத் வேலைக்கு எங்கும் செல்லாமல் சுற்றித்திரிந்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் அவர் வீட்டின் மாடியில் தனியாக தங்கி இருந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு பாஸ்கருக்கும், சரத்திற்கும் இடையே சாதாரண விஷயத்திற்கு வாக்குவாதம் உண்டானது.
தம்பதி கொலை
அதாவது தனது மகன் சரத்திற்கு பாஸ்கர் அறிவுரை கூறியதாக சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சரத் திடீரென்று வீட்டில் கிடந்த இரும்பு கம்பியை எடுத்து தந்தை என்றும் கூட பார்க்காமல் பாஸ்கரை கண் மூடித்தனமாக தாக்கி உள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சாந்தா தனது கணவரை காப்பாற்ற முயன்றுள்ளார். அப்போது தாய் சாந்தாவையும் இரும்பு கம்பியால் சரத் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில், தலையில் பலத்த காயம் அடைந்த 2 பேரும் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து விட்டார்கள். பின்னர் தனது தந்தை, தாயின் உடலை வீட்டுக்குள் வைத்து பூட்டி விட்டு சரத் தப்பி சென்று விட்டார். நேற்று காலையில் சச்சின் செல்போனில் தொடர்பு கொண்டு தனது தந்தை, தாயுடன் பேச முயன்றார். ஆனால் அவர்களிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை.
போலீஸ் விசாரணை
இதனால் சந்தேகமடைந்த சச்சின், தனது பெற்றோரை பார்க்க வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது தான் தந்தை, தாய் கொலை செய்யப்பட்டு கிடப்பதும், சகோதரர் சரத் தலைமறைவாகி இருப்பதும் சச்சினுக்கு தெரியவந்தது. இதுபற்றி அறிந்ததும் கொடிகேஹள்ளி போலீசார் மற்றும் துணை போலீஸ் கமிஷனர் லட்சுமி பிரசாத் விரைந்து வந்து தம்பதியின் உடலை கைப்பற்றி விசாரித்தனர்.
மேலும் சரத்திற்கு அடிக்கடி பாஸ்கர் அறிவுரை கூறி வந்ததால் தந்தை, மகன் இடையே தகராறு ஏற்பட்டு வந்ததும், இந்த காரணத்தால் கொலை நடந்திருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர். தலைமறைவாக உள்ள சரத் கூடிய விரைவில் கைது செய்யப்படுவார் என்று துணை போலீஸ் கமிஷனர் லட்சுமி பிரசாத் தெரிவித்துள்ளார்.
வலைவீச்சு
இதுகுறித்து கொடிகேஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாகி விட்ட சரத்தை வலைவீசி தேடிவருகிறார்கள். அறிவுரை கூறியதால் தந்தை, தாயை வாலிபர் அடித்துக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.