இளம்பெண் வரவேற்பாளர் கொலை; சான்று ஆவணங்கள் உள்ள ரிசார்ட் ஏன் இடிக்கப்பட்டது? தந்தை கேள்வி


இளம்பெண் வரவேற்பாளர் கொலை; சான்று ஆவணங்கள் உள்ள ரிசார்ட் ஏன் இடிக்கப்பட்டது? தந்தை கேள்வி
x

உத்தரகாண்டில் தங்கும் விடுதியில் சான்று ஆவணங்கள் உள்ளபோது அது ஏன் அரசால் இடிக்கப்பட்டது? என உயிரிழந்த சிறுமியின் தந்தை கேட்டுள்ளார்.



டேராடூன்,


உத்தரகாண்டில் பா.ஜ.க. பிரமுகர் மற்றும் முன்னாள் மந்திரியான வினோத் ஆர்யா என்பவரின் மகன் புல்கிட் ஆர்யா. இவருக்கு பவ்ரி ஹர்க்வல் மாவட்டம் ரிஷிகேஷ் அருகே வனந்த்ரா என்ற பெயரில் சொகுசு விடுதி உள்ளது.

இதில், அங்கிதா பண்டாரி (வயது 19) என்ற இளம்பெண் பணியாற்றி வந்துள்ளார். கடந்த 18-ந்தேதி பணி முடிந்தும் அவர் வீடு திரும்பவில்லை. இதுபற்றி அங்கிதாவின் தந்தை, சொகுசு விடுதியின் உரிமையாளரான புல்கிட் ஆர்யா மீது சந்தேகத்தின் பேரில் போலீசில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் 4 நாட்கள் கழித்து, கடந்த 22-ந்தேதி வழக்குப்பதிவு செய்த போலீசார் காணாமல் போன இளம்பெண் அங்கிதாவை தீவிரமாக தேடி வந்தனர். விசாரணையில், அங்கிதாவை ரிசார்ட் உரிமையாளரான புல்கிட் ஆர்யாவே கொலை செய்தது தெரியவந்தது.

அங்கிதாவை விடுதிக்கு பின்னால் உள்ள கால்வாயில் தள்ளி புல்கிட் ஆர்யா கொலை செய்துள்ளார். இந்த கொலைக்கு சொகுசு விடுதியில் பணியாற்றும் மேலும் 2 ஊழியர்கள் உடந்தையாக இருந்துள்ளனர். இதனை தொடர்ந்து அங்கிதாவை கால்வாயில் தள்ளி கொலை செய்த புல்கிட் ஆர்யா, ரிசார்ட் மேலாளர் உள்பட 3 பேரை கைது செய்த போலீசார் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட அங்கிதாவின் உடல் கால்வாயில் இருந்து மீட்கப்பட்டது.

இதன்மீது நடந்த முதற்கட்ட விசாரணையில், பாலியல் தொழிலில் ஈடுபட மறுத்ததால் அங்கிதாவை விடுதி உரிமையாளர் புல்கிட் கொலை செய்து கால்வாயில் வீசியது தெரிய வந்துள்ளது. இதனை தொடர்ந்து, அங்கிதா வரவேற்பாளராக பணியாற்றி வந்த புல்கிட் ஆர்யாவுக்கு சொந்தமான 'வனந்த்ரா' சொகுசு விடுதியை இடித்து தள்ள முதல்-மந்திரி புஷ்கர் சிங் தமி உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து விடுதியின் ஒரு பக்கம் இடித்து தள்ளப்பட்டது. இதுபற்றி விசாரணை மேற்கொள்ள சிறப்பு புலனாய்வு குழு ஒன்றும் அமைக்கப்பட்டு உள்ளது.

அங்கிதாவின் குடும்பத்தினர், பிரேத பரிசோதனை அறிக்கையை முதலில் ஒப்படைக்கும் வரை அவரது இறுதி சடங்கை நடத்தமாட்டோம் என தெரிவித்து உள்ளனர். இதுபற்றி அங்கிதாவின் தந்தை கூறும்போது, அந்த தங்கும் விடுதியில் சான்று ஆவணங்கள் உள்ளபோது அதனை ஏன் உத்தரகாண்ட் அரசு இடித்து உள்ளது? என கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்நிலையில், இந்த வழக்கை விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழுவினர், அங்கிதாவின் வாட்ஸ்அப் உரையாடல்களை ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளனர். அந்த சாட்டிங்கில், வாடிக்கையாளர்கள் என்ற பெயரில் ரிசார்ட்டில் தங்க வரும் நபர்களுக்கு 'சிறப்பு சேவை' செய்ய கட்டாயப்படுத்தப்பட்டேன் என தனது நெருங்கிய நண்பர்களில் ஒருவரிடம் அங்கிதா தெரிவித்து உள்ளார்.

பிரேத பரிசோதனை அறிக்கையில், நீரில் மூழ்கி அங்கிதா உயிரிழந்ததும், அவரது உடலில் மரணத்திற்கு முன்பு ஏற்பட்ட காயங்களும் உள்ளன என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுபற்றி விசாரணை மேற்கொண்டு வரும் குழுவின் டி.ஐ.ஜி. பி.ஆர். தேவி கூறும்போது, ரிசார்ட்டில் உள்ள பணியாளர்கள் ஒவ்வொருவரையும் விசாரணைக்கு காவல் நிலையம் வரும்படி கூறியுள்ளோம். ஒவ்வொருவரின் வாக்குமூலமும் பெறப்படும்.

ரிசார்ட்டின் பின்புலம் பற்றி முழு அளவில் ஆய்வு செய்து வருகிறோம். அங்கிதாவின் வாட்ஸ்அப் உரையாடல்கள் மீதும் விசாரணை நடந்து வருகிறது என கூறியுள்ளார். முறையான பிரேத பரிசோதனை அறிக்கை இன்னும் எங்களுக்கு வரவில்லை. எனினும், இன்று எங்களது கைகளில் அது கிடைத்து விடும் எனவும் அவர் கூறியுள்ளார். இந்த வழக்கு விரைவு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட வேண்டும். குற்றவாளிகள் தூக்கிலிடப்பட வேண்டும் என அங்கிதாவின் குடும்பத்தினர் வலியுறுத்தி வருகின்றனர்.


Next Story