காதலியை கொன்று உடலை புதைத்துவிட்டு, தூக்குப்போட்டு கள்ளக்காதலன் தற்கொலை
டி.நரசிப்புரா அருகே காதலியை கொன்று உடலை புதைத்துவிட்டு கள்ளக்காதலன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவத்துக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
மைசூரு: டி.நரசிப்புரா அருகே காதலியை கொன்று உடலை புதைத்துவிட்டு கள்ளக்காதலன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவத்துக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
கள்ளக்காதல்
மைசூரு மாவட்டம் டி.நரசிப்புரா தாலுகா எம்.கெப்பேகுந்தி கிராமத்தைச் சேர்ந்தவர் சித்தராஜு. அதே கிராமத்தைச் சேர்ந்தவர் சுமித்ரா. இவர்கள் இருவருக்கும் திருமணமாகி விட்டது. சித்தராஜு தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் கிராமத்தையொட்டிய பண்ணை வீட்டில் வசித்து வந்தார். சுமித்ராவும் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில் சித்தராஜுவுக்கும், சுமித்ராவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியது. இதையடுத்து இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர்.
தூக்குப்போட்டு தற்கொலை
இவர்களது கள்ளக்காதல் விவகாரம் இருவீட்டாருக்கும் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் அவர்களது குடும்பத்தினர் கண்டித்தனர். மேலும் கள்ளக்காதலை கைவிட்டு விடும்படி எச்சரித்தனர். ஆனால் இருவரும் கேட்கவில்லை. தங்களது கள்ளக்காதலை தொடர்ந்து வந்தனர். இந்த நிலையில் நேற்று சித்தராஜு, தனது கள்ளக்காதலி சுமித்ராவுடன் டி.நரசிப்புரா தாலுகாவிற்கு உட்பட்ட தலக்காடு பகுதிக்கு வந்தார்.
அங்குள்ள கோவிலில் சாமி தரிசனம் செய்த இருவரும், காவிரி ஆற்றங்கரையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் சுமித்ராவை, சித்தராஜு சரமாரியாக அடித்து, உதைத்தும், கழுத்தை நெரித்தும் படுகொலை செய்தார். பின்னர் அவரது உடலை ஆற்றங்கரையோரம் உள்ள வனப்பகுதியில் குழிதோண்டி புதைத்துவிட்டு, தானும் அங்குள்ள ஒரு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஆடியோ குறுந்தகவல்
அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு தன்னுடைய செல்போன் மூலம் தனது நண்பர் நிங்கராஜு என்பவருக்கு ஒரு ஆடியோ குறுந்தகவல் அனுப்பினார். அதில் தான் தனது கள்ளக்காதலியை கொன்று மண்ணில் புதைத்துவிட்டதாகவும், தனக்கு வாழ விருப்பம் இல்லை என்றும் கூறியிருந்தார். இந்த நிலையில் இதுபற்றி நிங்கராஜு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் சைபர் கிரைம் மூலம் சித்தராஜு கடைசியாக தலக்காடு காவிரி ஆற்றங்கரையில் இருந்து பேசியதை கண்டுபிடித்தனர்.
பின்னர் தலக்காடு போலீசாருக்கு இதுபற்றி தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தலக்காடு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தனர். அப்போது அங்கு சித்தராஜு, மரத்தில் தூக்கில் பிணமாக தொங்கினார். அருகே குழிதோண்டி புதைக்கப்பட்டு இருந்த சுமித்ராவின் உடலையும் போலீசார் கைப்பற்றினர்.
போலீஸ் விசாரணை
பின்னர் இருவரது உடல்களையும் போலீசார் பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சித்தராஜு எதற்காக தனது கள்ளக்காதலியை கொலை செய்துவிட்டு, தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியவில்லை. அதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.