எனது அரசு முழுமையாக நீடிக்கும்; அடுத்த தேர்தலிலும் வெற்றி பெறுவோம் - மராட்டிய முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே


எனது அரசு முழுமையாக நீடிக்கும்; அடுத்த தேர்தலிலும் வெற்றி பெறுவோம் - மராட்டிய முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே
x

எனது அரசு தனது பதவிக்காலத்தை நிறைவு செய்து, அடுத்த தேர்தலிலும் வெற்றி பெறும் என மராட்டிய முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே கூறினார்.

புதுடெல்லி,

டெல்லியில் உள்துறை மந்திரி அமித்ஷா மற்றும் பாஜக தலைவர் நட்டா ஆகியோருடனான ஆலோசனைக்கு பின், எனது அரசு தனது பதவிக்காலத்தை நிறைவு செய்து, அடுத்த தேர்தலிலும் வெற்றி பெறும் என மராட்டிய முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.

இன்று துணை முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் உடன் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த ஷிண்டே கூறியதாவது, "மராட்டியத்தில் வலுவான அரசு உள்ளது. எங்களிடம் 164 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர், எதிர்க்கட்சிகளுக்கு 99 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். எனது அரசு அதன் பதவிக்காலத்தை நிறைவு செய்யும். அடுத்த தேர்தலிலும் நாங்கள் வெற்றி பெறுவோம்.

கடந்த கால அரசாங்கத்தின் கீழ் எங்கள் எம்.எல்.ஏ.க்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டது. அப்போது எங்களால் பேச முடியவில்லை அதனால் தான் வெளியே அடி எடுத்து வைத்தோம்.

பாஜக மற்றும் சிவசேனாவின் இயல்பான கூட்டணியால் மட்டுமே மராட்டியத்தை முன்னோக்கி கொண்டு செல்ல முடியும்" என்று கூறினார்.

முன்னதாக, பாஜக வட்டாரங்கள் வெளியிட்ட தகவல்படி, இன்று நடைபெற்ற ஆரம்பகட்ட பேச்சுவார்த்தையில் ஷிண்டே கோஷ்டிக்கு 11 மந்திரி பதவிகளை பாஜக வழங்கியுள்ளதாகவும், மேலும் 29 மந்திரிகள் பா.ஜனதா கட்சியில் இருந்து பொறுப்பேற்பார்கள் என்றும் பரிந்துரைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.


Next Story