சிறுபான்மையினரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம்; பா.ஜனதா மீது சித்தராமையா குற்றச்சாட்டு


சிறுபான்மையினரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம்; பா.ஜனதா மீது சித்தராமையா குற்றச்சாட்டு
x

காங்கிரசுக்கு ஆதரவாக உள்ளதால் சிறுபான்மையினரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக சித்தராமையா குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

மைசூரு;

சித்தராமையா பேட்டி

முன்னாள் முதல்-மந்திரியும், தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையா, மைசூருவுக்கு 2 நாட்கள் சுற்றுப்பயணமாக நேற்றுமுன்தினம் வந்தார். இந்த நிலையில் நேற்று மைசூரு ராமகிருஷ்ணா நகரில் உள்ள தனது வீட்டில் வைத்து சித்தராமையா, நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நாட்டின் 75-வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு வீடுகள் தோறும் தேசியகொடி ஏற்ற பா.ஜனதா அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. பா.ஜனதா, சுதந்திர போராட்டத்தில் கலந்துகொண்டதா?.

பா.ஜனதாவினர் தேசியகொடிக்கு மதிப்பு கொடுப்பது கிடையாது. ஆனால் தற்போது பா.ஜனதாவினர், அரசியல் லாபத்திற்காக ஹர் கர் திரங்கா என்ற பெயரில் தேசிய கொடியை வீடுகளில் ஏற்றும்படி மக்களை ஏமாற்ற நாடகமாடி வருகின்றனர்.

தாவணகெரேயில் நடந்த சித்தராமோற்சவா விழா இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் மக்களை சென்றடைந்துள்ளது. இதனால் பா.ஜனதாவினருக்கு பயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த விழா குறித்து பா.ஜனதாவினர் தேவையில்லாத கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

விரைவில் அறிவிப்பேன்

வாக்காளர் பட்டியலில் இருந்து பிற்படுத்தப்பட்ட, ஆதிதிராவிடர் மற்றும் சிறுபான்மையினரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார். அவரது வார்த்தையில் உண்மை இருக்கிறது. சிறுபான்மையினர், காங்கிரஸ் பக்கம் இருப்பதால் அவர்களின் பெயர்கள் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டிருக்கலாம்.

கர்நாடக சட்டசபை தேர்தலில் நான் போட்டியிடும் தொகுதியை விரைவில் அறிவிப்பேன். எந்ததொகுதியில் போட்டியிட வேண்டும் என்று இன்னும் முடிவு செய்யவில்லை. நான், ஒரு தொகுதியில் நடக்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டால் அங்கு தான் போட்டியிடுவேன் என்று யாரும் நினைக்க வேண்டாம்.

பெங்களூரு சாம்ராஜ்பேட்டை ஈத்கா மைதானத்தில் தேசியகொடி ஏற்றுவதற்கு அரசு முடிவு செய்துள்ளது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்து செல்கிறது. இதனால் அண்டை நாடான இலங்கை நிலைமை நம் நாட்டுக்கும் வரலாம். இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story