பெங்களூருவில், வருகிற 13 முதல் 15-ந் தேதி வரை தேசியகொடி நிகழ்ச்சி
பெங்களூருவில், வருகிற 13 முதல் 15-ந் தேதி வரை தேசியகொடி நிகழ்ச்சி நடக்கிறது.
பெங்களூரு: பெங்களூரு மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் தலைமையில் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் நடைபெற்றது. இதில் மண்டல கமிஷனர்கள் உள்பட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் துஷார் கிரிநாத் பேசியதாவது:-
75-வது சுதந்திர தின பவள விழாவை முன்னிட்டு வருகிற 13 முதல் 15-ந் தேதி வரையில் ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட முக்கிய பகுதிகளில் உள்ளூர் முக்கிய பிரமுகர்களை அழைத்து 'ஹர் கர் திரங்கா' இயக்கத்தையொட்டி தேசிய கொடி நிகழ்ச்சிகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு தேவையான ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட மண்டல அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும். பெங்களூரு மாநகராட்சியில் 27 சட்டசபை தொகுதிகள் உள்ளன. ஒவ்வொரு தொகுதியிலும் தேசிய கொடி குறித்த நிகழ்ச்சியை நடத்த வேண்டும்.
இவ்வாறு துஷார் கிரிநாத் பேசினார்.
சிறப்பு கமிஷனர் ரங்கப்பா பேசுகையில், "பெங்களூரு மாநகராட்சி எல்லைக்குள் இதுவரை 10 லட்சம் தேசிய கொடிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது மட்டுமின்றி மாநகராட்சி அதிகாரிகள் வீடு வீடாக சென்று தேசிய கொடிகளை வினியோகம் செய்கிறார்கள்" என்றார்.