டெல்லியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட்டிய மாநாட்டில் தேசிய கட்சி தலைவர்கள் பங்கேற்பு


டெல்லியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட்டிய மாநாட்டில் தேசிய கட்சி தலைவர்கள் பங்கேற்பு
x

டெல்லியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட்டிய மாநாட்டில், தேசிய கட்சி தலைவர்கள் பங்கேற்றனர். மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

புதுடெல்லி,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அகில இந்திய தலைவர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

இதன் முன்னோட்டமாக கடந்த மாதம் (மார்ச்) 1-ந் தேதி சென்னையில் நடைபெற்ற அவரது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பரூக் அப்துல்லா, அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட பல தலைவர்கள் பங்கேற்றனர்.

தேசிய மாநாடு

இதன் அடுத்தகட்டமாக டெல்லியில் அகில இந்திய சமூகநீதி கூட்டமைப்பு சார்பில் சமூக நீதிக்கான முதல் தேசிய மாநாட்டை நடத்த அவர் திட்டமிட்டு இருந்தார்.

இதில் பங்கேற்குமாறு பல முதல்-மந்திரிகளுக்கும், கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இதனையடுத்து டெல்லியில் உள்ள மராட்டிய மாநில அரசு இல்லத்தின் அரங்கத்தில் நேற்று மாலை மாநாடு நடைபெற்றது.

மாநாட்டுக்கு காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ராஷ்டிரீய ஜனதா தளம், சமாஜ்வாடி மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகள் உள்பட 19 கட்சிகள் ஆதரவு தெரிவித்து இருந்தன.

ராஜஸ்தான் முதல்-மந்திரி

தேசிய அளவில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த மாநாடு மாலை 4.30 மணிக்கு தொடங்கியது. அரங்கத்தில் காணொலிக்கான உயர் தொழில்நுட்ப டிஜிட்டல் திரை வைக்கப்பட்டு இருந்தது. மாநாட்டின் தொடக்கத்தில் தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் மேற்கொண்ட சமூக நீதிக்கான நடவடிக்கைகள் பற்றிய குறும்படம் திரையிடப்பட்டது.

இதனைத்தொடர்ந்து முதல்-மந்திரிகள் அசோக் கெலாட் (ராஜஸ்தான்), ஹேமந்த் சோரன் (ஜார்கண்ட்), பீகார் துணை முதல்-மந்திரி தேஜஸ்வி யாதவ், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி பரூக் அப்துல்லா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ பிரையன் உள்ளிட்டோர் காணொலி காட்சி மூலம் பேசினார்கள்.

இதுதவிர காங்கிரஸ் மூத்த தலைவர் வீரப்பமொய்லி, இந்திய கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் டி.ராஜா, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், ஆம் ஆத்மி கட்சி எம்.பி. சஞ்சய்சிங், சமூகநீதி கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வில்சன் எம்.பி. உள்ளிட்டோர் நேரடியாகவும் மாநாட்டில் பேசினர்.

தலைமை உரை

இறுதியாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்தவாறு காணொலி காட்சி மூலமாக தலைமை உரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

சமூகநீதி கருத்தியல்

ஒட்டுமொத்த இந்தியாவையும் இணையத்தால் இணைத்துள்ளோம். சமூகநீதி நம்மை இணைத்துள்ளது. சமூகநீதியை காக்கும் கடமை நமக்குதான் இருக்கிறது. சமூகநீதியை அடைய போராடுவது ஒரு மாநிலம் அல்லது சில மாநிலங்களின் பிரச்சினை அல்ல. அது இந்திய சமூக அமைப்பு முறை சார்ந்த அனைத்து மாநிலங்களின் பிரச்சினை ஆகும்.

ஒவ்வொரு மாநிலத்துக்கும் சாதி, வகுப்பு அளவீடுகள் வேறுபடலாம். ஆனால் பிரச்சினை ஒன்றுதான். புறக்கணிப்பு, ஒதுக்குதல்-தீண்டாமை, அடிமைத்தனம், அநீதி எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் அதை முறிக்கும் மருந்தாக இருப்பதுதான் சமூகநீதி. பாம்பின் விஷத்தை நீக்க விஷமுறிவாக அந்த விஷமே பயன்படுவதைப் போல, சாதியால் புறக்கணிக்கப்பட்டவர்களை உயர்த்த அந்த சாதியே பயன்படுகிறது. அதுதான் இடஒதுக்கீடு என்ற சமூகநீதி கருத்தியல்.

சமூகநீதி எனப்படும் இடஒதுக்கீடு என்பதே சமூகரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பின்தங்கியவர்களுக்கு தரப்பட வேண்டும் என்பதுதான் இந்திய அரசியலமைப்பு சட்ட வரையறை. இந்த திருத்தத்துக்கு காரணமான தலைவர்கள்தான் பெரியாரும், அண்ணாவும்.

பொருளாதார இடஒதுக்கீடு

சமூகரீதியாகவும், கல்வி ரீதியாகவும் என்பதில் பொருளாதார அடிப்படையில் என்பதை வஞ்சமாக சேர்த்துவிட்டது மத்திய பா.ஜ.க. அரசு. அவர்கள் பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு தந்துவிட்டார்கள். பொருளாதாரம் என்பது நிலையான அளவுகோல் அல்ல. ஏனென்றால், ஏழையாக இருப்பவர் பணக்காரர் ஆகலாம். பணக்காரராக இருப்பவர் ஏழை ஆகலாம். பணம் இருப்பதை ஒருவர் மறைக்கலாம். இது சரியான அளவுகோல் அல்ல.

உயர்சாதி ஏழைகள் என்று சொல்லி இடஒதுக்கீடு தருகிறது பா.ஜ.க. அரசு. இது சமூகநீதி அல்ல. ஏழைகளுக்காக எந்த பொருளாதார உதவி செய்வதையும் நாங்கள் தடுக்கவில்லை. அது பொருளாதார நீதியாகுமே தவிர சமூகநீதியாகாது. ஏழைகள் என்றால் அனைத்து ஏழைகளும்தானே இருக்க முடியும்?. அதில் என்ன உயர்சாதி ஏழைகள்? ஒடுக்கப்பட்ட சாதி ஏழைகளை புறக்கணிப்பதே சமூக அநீதி அல்லவா. அதனால்தான் பொருளாதார அளவுகோலை இடஒதுக்கீட்டில் நாங்கள் எதிர்க்கிறோம்.

10 சதவீத இடஒதுக்கீடு

உயர்சாதியில் இருக்கும் ஏழைகளுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது மத்திய பா.ஜ.க. அரசின் திட்டம். இடஒதுக்கீடு வழங்குவதால் தகுதி போய்விட்டது, திறமை போய்விட்டது என்று சொல்லி வந்த சிலர் இந்த இடஒதுக்கீட்டை மட்டும் ஆதரிக்கிறார்கள்.

இடஒதுக்கீடு மூலமாக அனைத்து சமூக மக்களும் படித்து வேலைக்கு போய் விடுகிறார்கள் என்ற வன்ம எண்ணம்தான் அப்படி சொல்ல வைக்கிறது. 10 சதவீத இடஒதுக்கீடு தருவதால் தகுதி, திறமை போகாதா?.

100, 200 ஆண்டுகளுக்கு முன்னால் உயர்சாதியினர் மட்டுமே படிக்கலாம் என்ற காலம் இருந்தது போல அதை உருவாக்க நினைக்கிறார்கள். இதை தடுக்க வேண்டும்.

சமூகநீதி என்ற பெயரால் சமீபத்தில் கர்நாடக மாநிலத்தில் இஸ்லாமியர்களுக்கான தனி இடஒதுக்கீட்டை முழுமையாக ரத்து செய்து அவர்களை உயர்சாதி ஏழைகள் என்ற பிரிவில் சேர்த்து உள்ளார்கள். இஸ்லாமியர்களிடம் இருந்து பறித்து வேறு இரண்டு சமூகத்துக்கு பிரித்துக்கொடுத்துவிட்டு, அவர்களுக்குள் மோதலை உருவாக்கி இருக்கிறார்கள். பட்டியலின மக்களுக்குக்குள் பாகுபாடு காட்டப்பட்டு உள்ளது. சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்து இதை செய்துள்ளார்கள்.

பா.ஜ.க.வுக்கு வாக்களிப்பவர்கள், வாக்களிக்காதவர்கள் என்று நினைத்து இந்த பாகுபாடு செய்யப்பட்டு உள்ளது. அங்கு வெளிப்படையாகவே சமூகநீதி கொலை செய்யப்பட்டுள்ளது.

சாதிவாரி கணக்கெடுப்பு

பட்டியலின மக்களின் இடஒதுக்கீடு முறையாக வழங்கப்பட வேண்டும். பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் இடஒதுக்கீடு முறையாக வழங்கப்பட வேண்டும். நீதித்துறையில் இடஒதுக்கீடு செயல்பாட்டிற்கு வர வேண்டும். இதர பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீடு உறுதி செய்யப்பட வேண்டும்.

சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்தி அதன் தரவுகளை வெளியிட வேண்டும். இவற்றை அகில இந்திய ரீதியிலும், மாநில அளவிலும், சமூகரீதியாகவும் கண்காணிக்க வேண்டும்.

இணைந்து போராடுவோம்

எத்தகைய உன்னதமான கருத்தியலாக இருந்தாலும் அது வெற்றி பெறுவதற்கு அந்த கருத்தியலை ஏற்றுக்கொண்ட சக்திகளின் ஒற்றுமை என்பது மிகமிக அவசியம். ஒவ்வொரு மாநிலத்திலும் அது நடக்க வேண்டும். அது அகில இந்தியா முழுமைக்குமானதாக ஒன்றாதல் வேண்டும்.

அதற்கு இதுபோன்ற கூட்டமைப்புகள் அடித்தளம் அமைக்கும். சமூகநீதி, சமதர்ம மற்றும் சகோதரத்துவ இந்தியாவை உருவாக்க நாம் அனைவரும் இணைந்து போராடுவோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஆங்கிலத்தில் பேச்சு

தலைமை உரையை முழுமையாக தமிழில் பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், இடை இடையே முக்கியமான கருத்துகளை ஆங்கிலத்தில் எடுத்துரைத்தார்.

அவரது தமிழ் உரை, ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்யப்பட்டு மாநாட்டில் எழுத்துவடிவில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.


Next Story