உப்பள்ளியில் தேசிய இளைஞர் தினவிழா; பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்


உப்பள்ளியில் தேசிய இளைஞர் தினவிழா; பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
x

உப்பள்ளியில் நேற்று தேசிய இளைஞர் தின விழா கோலாகலமாக தொடங்கியது. 28 மாநிலங்களை ேசர்ந்த 5 லட்சம் பேர் பங்கேற்கும் இந்த விழாவை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார்.

பெங்களூரு:

தேசிய இளைஞர் தினவிழா

கர்நாடக மாநிலம் உப்பள்ளியில் சுவாமி விவேகானந்தர் பிறந்தநாளையொட்டி ஜனவரி 12-ந்தேதி (அதாவது நேற்று) முதல் 16-ந்தேதி வரை 5 நாட்கள் தேசிய இளைஞர் தின விழா கொண்டாட முடிவு செய்யப்பட்டது. இந்த விழாவை பிரதமர் மோடி தொடங்கிவைப்பார் எனவும் அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை மற்றும் கர்நாடக அரசின் இளைஞர் நலத்துறை ஆகியவை செய்து வந்தன.

அதன்படி உப்பள்ளியில் நேற்று தேசிய இளைஞர் தின விழா கோலாகலமாக தொடங்கியது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு, இளைஞர் விழாவை தொடங்கிவைத்தார். மேலும் கர்நாடகம், தமிழ்நாடு உள்பட 28 மாநிலங்களில் இருந்து வந்த மாணவ குழுவினர் தங்களது கலாசாரம், பண்பாட்டை விளக்கும் வகையில் ஊர்வலமாக அணிவகுத்து வந்தனர். அந்த அணிவகுப்பை பிரதமர் மோடி மேடையில் அமர்ந்து பார்த்து ரசித்தார்.

பிரதமர் மோடி பேச்சு

மேலும் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், மல்லர்கம்பம், சிலம்பாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடந்தது. அதைத்தொடர்ந்து பிரதமர் மோடி பேசியதாவது:-

சில ஆண்டுகளுக்கு முன்பு நாட்டில் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் முறையை தொடங்கியபோது, அதை சிலர் வேடிக்கை செய்தனர். தூய்மை பாரத திட்டத்தை தொடங்கியபோது, இது இந்தியாவில் வெற்றி பெறாது என்று கூறினர். ஏழை மக்களுக்காக ஜன்தன் வங்கி கணக்கை தொடங்கினோம். இதற்காக ஒரு திட்டம் அமல்படுத்தப்பட்டது. அதையும் சிலர் கேலி செய்தனர்.

வங்கி கணக்குகள்

கொரோனா பரவியபோது, நாம் இயற்கை முறையில் நமது சொந்த கொரோனா தடுப்பூசியை எடுத்து கொண்டோம். அதையும் சிலர் வேடிக்கையாக பார்த்தனர். ஆனால் இன்று டிஜிட்டல் பண பரிமாற்றத்தில் இந்தியா உலக நாடுகளுக்கு தலைவராக திகழ்கிறது. இன்று நமது பொருளாதாரத்தின் பெரும் பலமாக ஜன்தன் வங்கி கணக்குகள் உள்ளன.

தடுப்பூசி விஷயத்தில் இந்தியாவின் சாதனையை உலக நாடுகள் விவாதிக்கின்றன. அதனால் இளைஞர்களாகிய உங்களுக்கு திறன் இருந்தால், அதை சிலர் கேலி செய்வார்கள், எதிர்ப்பு தெரிவிப்பார்கள். ஆனால் நீங்கள் அதை கண்டுகொள்ளாமல் உங்களின் யோசனைகளை நம்புங்கள், அதில் உறுதியாக இருங்கள். அதன் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். உங்களின் வெற்றி, வேடிக்கையாக பேசியவர்களை விட பெரிதாக இருக்கும். அதனால் அதை பற்றி யோசியுங்கள்.

பொன்னான காலம்

தற்போது இந்தியா உலகின் 5-வது பொிய பொருளாதார பலமிக்க நாடாக உள்ளது. இதை 3-வது இடததிற்கு கொண்டு வர இலக்கு நிர்ணயித்துள்ளோம். நமது நாட்டின் இந்த பொருளாதார வளர்ச்சி இளைஞர்களுக்கு எண்ணில் அடங்காத வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. உங்களின் முயற்சியில் சக்தி வாய்ந்தவராக இருப்பது, கருத்தில் பரந்து விரிந்த பார்வையை கொண்டிருப்பது, நடைமுறைக்கு ஏற்ற வகையில் இருப்பது தான் இளமை, இளைஞர்.

நம்பிக்கைகளும், வாய்ப்புகளும் ஒருசேர வருவதால் இது நமக்கு பொன்னான காலம் ஆகும். இந்தியாவின் மகளிர் சக்தி நமது நாட்டை பலப்படுத்தியுள்ளது. இந்திய பெண்கள் இன்று விமானங்களை இயக்குகிறார்கள். இந்த நூற்றாண்டு இந்தியாவை சேர்ந்தது. இது இந்திய இளைஞர்களின் நூற்றாண்டு. பெரும் முதலீட்டாளர்களில் பெரும் பகுதியினர் இந்தியாவில் முதலீடு செய்ய விரும்புவதாக ஒரு ஆய்வு சொல்கிறது.

இளைஞர்கள் மீது நம்பிக்கை

அவர்கள் இந்திய இளைஞர்கள் மீது முதலீடு செய்ய விரும்புகிறார்கள். அதனால் வரலாற்றில் இது ஒரு சிறப்பு வாய்ந்த தருணம். தற்போது உள்ள இளம் தலைமுறையினர் சிறப்பு வாய்ந்தவர்கள். இதை பயன்படுத்தி கொண்டு இந்தியாவுக்காக தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். உங்களுக்காக ஓடுதளம் தயாராக உள்ளது. நீங்கள் அதில் பறக்க வேண்டும். உலகில் இந்தியா, இளைஞர்கள் மீது பெரும் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

இந்திய பயணத்தில் இளைஞர்களின் சக்தி முன்னிலையில் இருக்கும் ஒரு படை ஆகும். இந்தியாவை கட்டமைக்க அடுத்த 25 ஆண்டுகள் மிக முக்கியமானவை. இளைஞர் சக்தியின் கனவு, விருப்பங்கள் இந்தியாவின் இடத்தை முடிவு செய்கிறது. இந்த உப்பள்ளி பகுதியை சேர்ந்த ராணுவ வீர் லான்ஸ் நாயக் ஹனுமந்தப்பா கொப்பட் மைனஸ் 55 டிகிரி குளிரில் அவரது தைரியத்தை நிரூபித்தார்.

சுவாமி விவேகானந்தர்

அவர் மரணத்தை தோற்கடித்து உயிருடன் மேலே வந்தார். இது தைரியத்திற்கு மட்டும் பெயர் பெற்ற பகுதி அல்ல. மிகப்பெரிய பொறியாளர் விஸ்வேசுவரய்யாவும் இதே மாநிலத்தை சேர்ந்தவர். பக்தி நிறைந்த கர்நாடகம் கித்தூர் ராணி சென்னம்மா, சங்கொள்ளி ராயண்ணா போன்ற விடுதலை போராட்ட வீரா்களையும் வழங்கியது. அவர்கள் ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடினர்.

மற்றவர்கள் நம்மை பார்த்து வேடிக்கை செய்தாலும் இன்றைய இளைஞர்கள் சுவாமி விவேகானந்தரின் கொள்கைகளை பின்பற்ற வேண்டும். புத்தாக்கம் குறித்து விவேகானந்தர் கூறிய விஷயத்தை இளைஞர்கள் கவனிக்க வேண்டும். ஒவ்வொரு செயலும் ஏளனம், எதிர்ப்பு, ஏற்பு ஆகிய மூன்று விஷயங்களை கடந்து தான் செல்ல வேண்டும் என்று அவர் கூறினார். புதுமையை ஒரு வரியில் கூற வேண்டுமெனில் அது இது தான்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

மிகுந்த உற்சாகம்

இந்த விழாவில் கவர்னர் தாவர்சந்த் கெலாட், முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகலாத்ஜோஷி, மத்திய இளைஞர் நலத்துறை மந்திரி அனுராக் தாக்கூர் உள்பட மந்திரிகள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக பிரதமர் மோடியை உப்பள்ளி விமான நிலையத்தில் கவர்னர் தாவர்சந்த் கெலாட், முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, மத்திய மந்திரி பிரலாகத்ஜோஷி ஆகியோர் வரவேற்றனர். அதைத்தொடர்ந்து விமான நிலையத்தில் இருந்து விழா நடைபெற்ற ரெயில்வே மைதானம் வரை 8 கிலோ மீட்டர் தூரத்திற்கு காரில் தனது இருக்கையில் இருந்து எழுந்து நின்றபடி சாலையின் இருபுறமும் குவிந்திருந்த பா.ஜனதா தொண்டர்கள் மற்றும் பொதுமக்களை நோக்கி கை அசைத்தப்படி வந்தார். மோடியின் கார் மீது பூக்களை தூவி வரவேற்றனர். சில இடங்களில் மோடி காரில் இருந்து இறங்கி கூட்டத்தினர் அருகே வந்து இரு கைகளையும் உயர்த்தி அசைத்திவிட்டு சென்றார். இதனால் அங்கு கூடியிருந்த மக்கள்மிகுந்த உற்சாகம் அடைந்தனர்.

டிஜிட்டல் இந்தியா

நேற்று தொடங்கியுள்ள இந்த திருவிழாவில் ஒரு லட்சம் பேர் கலந்துகொண்டனர். 5 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் மாணவா்களை மையப்படுத்தும் ஆட்சி நிர்வாகம், டிஜிட்டல் இந்தியா குறித்த கருத்தரங்கங்கள் நடக்கின்றன. சாகச விளையாட்டு போட்டிகள், நமது பாரம்பரிய விளையாட்டுகளின் காட்சி, கலாசார போட்டிகள் நடத்தப்பட உள்ளது. இவற்றில் அனைத்து மாநிலங்களை சேர்ந்த குழுக்கள் கலந்து கொள்கின்றன.

மேலும் போட்டி அல்லாத நிகழ்ச்சிகள் யுவ கிருதி, சாகச நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன. இளம் கலைஞர்கள் முகாமும் நடக்கிறது. வருகிற 15-ந் தேதி அங்கு யோகத்தான் என்ற மாரத்தான் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அன்றைய தினம் காலை 6 மணிக்கு இந்த நிகழ்ச்சி தொடங்கி 8 மணி வரை நடக்கிறது. இதில் நாடு முழுவதும் இருந்து 5 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பசுமை இளைஞர் திருவிழா

மேலும் இந்த விழாவில் இளைஞர்கள் மாநாடு நடக்கிறது. இதில் பணி, தொழில், புத்தாக்கம், 21-ம் நூற்றாண்டு திறன், காலநிலை மாற்றம், பேரிடர் சிக்கலை குறைப்பது, அமைதியை நிலைநாட்டுதல், ஆட்சி நிர்வாகம் குறித்து பகிர்ந்து கொள்ளுதல் உள்ளிட்டவை குறித்து கருத்தரங்குகள் நடக்கின்றன. இந்த ஆண்டு இந்த நிகழ்வு பசுமை இளைஞர் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி இங்கு வழங்கப்படும் நினைவு பரிசுகள், பதக்கங்கள், எழுது பொருட்கள் போன்றவை மீண்டும் பயன்படுத்தக்கூடியவை ஆகும். குடிநீரை நிரப்பி கொள்ளும் நிலையங்கள் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் அதிகளவில் குடிநீர் பாட்டில்கள் பயன்படுத்துவது குறைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story