உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட விக்ராந்த் விமானந்தாங்கி போர்க்கப்பல் அடுத்த மாதம் கடற்படையில் சேர்ப்பு..!


உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட விக்ராந்த் விமானந்தாங்கி போர்க்கப்பல் அடுத்த மாதம் கடற்படையில் சேர்ப்பு..!
x

கோப்புப்படம் ANI

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட விமானந்தாங்கி போர்க்கப்பலின் 4-வது கட்ட பரிசோதனை நேற்று வெற்றிகரமாக நிறைவடைந்தது.

புதுடெல்லி,

முற்றிலும் உள்நாட்டிலேயே வடிவமைத்து கட்டப்பட்ட விக்ராந்த் விமானந்தாங்கி போர்க்கப்பல் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் முதற்கட்ட கடல் சோதனைகளை வெற்றிகரமாக நிறைவு செய்தது. இதன் தொடர்ச்சியாக கடந்த அக்டோபர் மற்றும் இந்த ஆண்டு ஜனவரியில் மேலும் 2 கட்ட பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இதில் உந்துவிசை எந்திரங்கள், மின்னணு தொகுப்புகள், உயிர்காக்கும் உபகரணங்கள், கப்பலின் வழிசெலுத்தல் மற்றும் தொடர்பு அமைப்புகள் ஆகியவற்றின் சோதனை நடந்தது.

இதைத்தொடர்ந்து தற்போது 4-வது கட்ட பரிசோதனை நேற்று வெற்றிகரமாக நிறைவடைந்தது. இதில் சில விமான வசதிகள், முக்கிய தளவாடங்கள் உள்பட பெரும்பாலான ஆயுதங்கள் மற்றும் அமைப்புகளின் ஒருங்கிணைந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த பரிசோதனைகள் அனைத்தும் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ள நிலையில், கப்பல் இந்த மாத இறுதியில் கடற்படையிடம் ஒப்படைக்கப்படுகிறது. பின்னர், நாடு விடுதலையடைந்த 75-வது ஆண்டு நினைவாக அடுத்த மாதம் (ஆகஸ்டு) கடற்படையில் முறைப்படி சேர்க்கப்படுகிறது. ரூ.19,341 கோடி செலவில் கட்டப்பட்டு உள்ள இந்த கப்பல் 262 மீட்டர் நீளமும், 62 மீட்டர் அகலமும், 59 மீட்டர் உயரமும் கொண்டதாகும்.

இந்த தகவலை கடற்படை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.


Next Story