கோணிகொப்பா அருகே கடமானை வேட்டையாடிய 2 பேர் கைது
கோணிகொப்பா அருகே கடமானை வேட்டையாடிய 2 பேரை வனத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
குடகு;
குடகு மாவட்டம் கோணிகொப்பா அருகே உள்ளது ஹாதூரு கிராமம். இந்த கிராமம் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது வனப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் 2 பேர் சுற்றித் திரிந்து கொண்டிருந்தனர்.
வனத்துறையினரைக் கண்ட அவர்கள் ஓட்டம் பிடித்தனர். இதையடுத்து வனத்துறையினர் அவர்கள் 2 பேரையும் விரட்டிச்சென்று பிடித்தனர். விசாரணையில் அவர்கள் கொக்கண்டா கிராமத்தைச் சேர்ந்த சத்யஞ்ஜெயா, கோணிகொப்பா பகுதியைச் சேர்ந்த சரண் ஆகியோர் என்பதும், அவர்கள் கடமான் ஒன்றை வேட்டையாடி அதன் இறைச்சி, கொம்புகள், தோல் மற்றும் பிற உறுப்புகளை தனித்தனியாக பிரித்து விற்பனைக்கு கொண்டு சென்றதும் தெரியவந்தது.
இதையடுத்து சத்யஞ்ஜெயா உள்பட 2 பேரையும் வனத்துறையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 60 கிலோ கடமான் இறைச்சி மற்றும் பயங்கர ஆயுதங்களை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் வனத்துறையினர் விசாரித்து வருகிறார்கள்.