மங்களூரு அருகே வாலிபர் தூக்குப்போட்டு சாவு
மங்களூரு அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மங்களூரு-
தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே குத்தாரு முண்டோலி பகுதியில் வசித்து வந்தவர் யத்திராஜ் கட்டி(வயது 20). இதே பகுதியில் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு பிரக்ஷா என்ற இளம்பெண் வசித்து வந்தார். அவர் மாடல் அழகியாக இருந்து வந்தார். இந்த நிலையில் திடீரென பிரக்ஷா தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலை வழக்கில் யத்திராஜ் கட்டி குற்றம்சாட்டப்பட்டார். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து யத்திராஜ் கட்டியிடம் விசாரணை நடத்தி வந்தனர். இதனால் அவர் மனமுடைந்து வாழ்ந்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு யத்திராஜ் கட்டி தனது வீட்டின் பால்கனியில் வைத்து தூக்குப்போட்டுக் கொண்டார். அதைப்பார்த்த அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் யத்திராஜ் கட்டியை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆஸ்பத்திரியில் அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து உல்லால் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.