மூடபித்ரி அருகே இரும்பு தடுப்பு வேலியில் சிக்கி சிறுத்தை சாவு


மூடபித்ரி அருகே  இரும்பு தடுப்பு வேலியில் சிக்கி சிறுத்தை சாவு
x
தினத்தந்தி 7 Jun 2023 12:15 AM IST (Updated: 7 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

மூடபித்ரி அருகே கிராமத்திற்குள் நுழைய முயன்ற சிறுத்தை இரும்பு தடுப்பு வேலியில் சிக்கி செத்தது.

மங்களூரு,-

மூடபித்ரி அருகே கிராமத்திற்குள் நுழைய முயன்ற சிறுத்தை இரும்பு தடுப்பு வேலியில் சிக்கி செத்தது.

சிறுத்தைகள் நடமாட்டம்

தட்சிண கன்னடா மாவட்டம் மூடபித்ரி தாலுகா கின்னிகோலியை அடுத்த மித்தபெட்டு கிராமம் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் இருந்து சிறுத்தை, புலி உள்ளிட்ட வன விலங்குகள் வெளியேறி கிராமத்திற்குள் வந்து அட்டகாசம் செய்து வருகின்றன. குறிப்பாக பொதுமக்கள் வெளியே நடமாட முடியாத அளவிற்கு வன விலங்குகள் அச்சுறுத்தி வருகின்றன.

இது குறித்து அந்த கிராம மக்கள் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். ஆனால் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அதிருப்தியடைந்த கிராம மக்கள், வன விலங்குகள் வெளியேறுவதை தடுக்க வனப்பகுதியை சுற்றி சொந்த செலவில் இரும்பு கம்பிகளை கொண்டு தடுப்பு வேலிகள் அமைத்தனர்.

தடுப்பு வேலியில் சிக்கி சாவு

இந்த தடுப்பு வேலியை தாண்டி சிறுத்தை ஒன்று வர முயற்சித்ததாக தெரிகிறது. அப்போது அந்த சிறுத்தை இரும்பு கம்பியில் சிக்கி கொண்டது. இதில் சிறுத்தை தடுப்பு வேலியில் உள்ள கம்பியில் கழுத்து இறுக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை வனப்பகுதியின் வழியாக சென்ற பொதுமக்கள் இதை பார்த்து, வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறை அதிகாரிகள் சிறுத்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்தனர். பின்னர் அந்த சிறுத்தையை அதே பகுதியில் குழிதோண்டி புதைத்தனர்.

நடவடிக்கை எடுக்க கோரிக்கை

இதற்கிடையில் மித்தபெட்டு கிராமத்தை சேர்ந்த மக்கள் வனத்துறையினரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் சிறுத்தைகள், புலிகள் நடமாட்டத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பல முறை கோரிக்கை வைத்துவிட்டோம்.

ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த சம்பவத்திற்கு பிறகாவது துரிதமாக நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லையென்றால் போராட்டம் நடத்தப்படும் என்று கூறினர். இதை கேட்ட வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.


Next Story