விராஜ்பேட்டை அருகே காட்டு யானை தாக்கி தொழிலாளி படுகாயம்
விராஜ்பேட்டை அருகே காட்டு யானை தாக்கி தொழிலாளி படுகாயம் அடைந்தார். அவருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
குடகு-
விராஜ்பேட்டை அருகே காட்டு யானை தாக்கி தொழிலாளி படுகாயம் அடைந்தார். அவருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
காட்டு யானை தாக்கியது
குடகு மாவட்டம் விராஜ்பேட்டை தாலுகா பாலிபெட்டா பகுதியை சேர்ந்தவர் மது (வயது 48). காபி தோட்ட கூலி தொழிலாளி. இவரது மனைவி மீனா. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மது தனது மனைவி மீனாவுடன் கடைக்கு சென்றுவிட்டு வனப்பகுதியையொட்டி உள்ள காபி தோட்டம் வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது வனப்பகுதியில் இருந்து காட்டு யானை ஒன்று வெளியேறி உள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மதுவும், மீனாவும் அங்கிருந்து தப்பியோட முயன்றனர். ஆனாலும் காட்டு யானை 2 பேரையும் விரட்டி சென்று தாக்கியது. பின்னர் அந்த காட்டு யானை வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது.
தீவிர சிகிச்சை
காட்டு யானை தாக்கியதில் மது பலத்த காயம் அடைந்தார். மீனா லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். இதுபற்றிய தகவல் அறிந்ததும் அந்தப்பகுதியில் இருந்தவர்கள் விரைந்து வந்து 2 பேரையும் மீட்டு விராஜ்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மதுவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் மீனா அங்கு சிகிச்சை பெற்று கொண்டார். இதுபற்றிய தகவல் அறிந்ததும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். அப்போது அந்தப்பகுதி மக்கள் காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டியடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.