வறட்சி பகுதிகளை அறிவிக்கும் விதிமுறைகளில் திருத்தம் வேண்டும்- மத்திய விவசாய மந்திரிக்கு சித்தராமையா கடிதம்


வறட்சி பகுதிகளை அறிவிக்கும் விதிமுறைகளில் திருத்தம் வேண்டும்- மத்திய விவசாய மந்திரிக்கு சித்தராமையா கடிதம்
x

வறட்சி பகுதிகளை அறிவிக்கும் விதிமுறைகளில் திருத்தம் செய்ய வேண்டும் என்று மத்திய விவசாய மந்திரி நரேந்திரசிங் தோமருக்கு முதல்-மந்திரி சித்தராமையா கடிதம் எழுதியுள்ளார்.

பெங்களூரு:-

மத்திய விவசாயத்துறை மந்திரி நரேந்திரசிங் தோமருக்கு முதல்-மந்திரி சித்தராமையா நேற்று ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

அறிவிக்க முடியவில்லை

கர்நாடகத்தில் நடப்பு தென்மேற்கு பருவமழை பற்றாக்குறையாக பெய்துள்ளது. 336 மில்லி மீட்டர் அளவுக்கு பெய்ய வேண்டிய மழை 234 மில்லி மீட்டர் அளவுக்கு தான் பெய்துள்ளது. 34 சதவீத மழை பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. தொடக்கத்தில் மழை தாமதமாக தொடங்கியது. ஜூன் மாதத்தில் மழை பற்றாக்குறை 56 சதவீதமாக இருந்தது. பல்வேறு தாலுகாக்களில் வறட்சி போன்ற நிலை இருக்கிற போதும், தற்போதுள்ள விதிமுறைகளின்படி வறட்சி பகுதிகளை அறிவிக்க முடியவில்லை.

இதனால் பயிர் சேதங்களுக்கு இழப்பீடு உள்ளிட்ட உரிய உதவி கிடைக்காமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது உள்ள நடைமுறைகள் நியாயமானதாக இருந்தாலும், ஒவ்வொரு மாநிலத்திலும் தனித்தனி சவால்கள் உள்ளன. அதற்கேற்ப தேவைகளும் இருக்கின்றன. தற்போதுள்ள நிலையில் காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டுள்ள வறட்சி பகுதிகளை அறிவிக்க விதிமுறைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

பொருளாதார சிக்கல்கள்

தற்போதைய நிலையில் விதிமுறைகளை எளிதாக்க வேண்டியது அவசியம். அடிக்கடி வறட்சி நிலை ஏற்படுவதால் மோசமான சிக்கல்கள் ஏற்படுகின்றன. அதாவது பயிர்கள் கருகுவது, தண்ணீர் பற்றாக்குறை, கிராமப்புற மக்களுக்கு சமூக-பொருளாதார சிக்கல்கள் ஏற்படுகின்றன. கர்நாடகத்தில் 14 விவசாய காலநிலை மண்டலங்கள் உள்ளன. ஒவ்வொரு மண்டலமும் ஒரு விதமான சவாலை எதிர்கொள்கிறது.

அதனால் உள்ளூர் சுற்றுச்சூழல் காரணங்கள், தண்ணீர் பற்றாக்குறை, வேளாண் தொழில் ஆகியவற்றை மனதில் நிறுத்தி வறட்சி பகுதிகளை முடிவு செய்ய மண்டல அடிப்படையில் விதிமுறைகளை உருவாக்க வேண்டியது அவசியம். மழை பற்றாக்குறை 20 முதல் 59 சதவீதம் வரை இருந்தால் வறட்சி பகுதிகளை அறிவிக்க வேண்டும். 2 வாரங்களுக்கும் குறைவாக தொடர்ந்து மழை பெய்யாத பகுதிகளை வறட்சி பகுதிகளாக அறிவிக்க பரிசீலிக்க வேண்டும். இவற்றை கருத்தில் கொண்டு வறட்சி பகுதிகளை முடிவு செய்வதற்கான விதிமுறைகளில் திருத்தம் செய்ய வேண்டும்.

இவ்வாறு சித்தராமையா தெரிவித்துள்ளார்.


Next Story