ஆண் குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் நேபாள கோவிலுக்கு வழிபடச்சென்று பலியான மதுக்கடை அதிபர்


ஆண் குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் நேபாள கோவிலுக்கு வழிபடச்சென்று பலியான மதுக்கடை அதிபர்
x

கோப்புப்படம்

உ.பி. மதுக்கடை அதிபர், விமான விபத்தில் பலியானார். அவர் உடன் அழைத்துச்சென்றிருந்த நண்பர்களும் அதே விபத்தில் உயிரிழந்தனர்.

காத்மாண்டு,

நேபாள நாட்டில் நேற்று முன்தினம் பொங்கல் பண்டிகையின்போது நடந்த கோர விமான விபத்தில் பலியான 72 பேரில் 5 பேர் இந்தியர்கள் ஆவார்கள். இந்த 5 பேரில் 4 பேர் ஒரே குழுவாக சென்றவர்கள்.

அவர்கள் உத்தரபிரதேச மாநிலம், காசிப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சோனு ஜெய்ஸ்வால் (வயது 35), அபிஷேக் குஷ்வாகா (25), விஷால் சர்மா (22) மற்றும் அனில்குமார் ராஜ்பர் (27) ஆவார்கள். இந்த 4 பேரும் நேபாளத்துக்கு சென்றது ஏன் என்பது பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளன.

ஆண் குழந்தை

சோனு ஜெய்ஸ்வால், காசிப்பூர் பகுதியில் மதுபானக் கடை அதிபராக இருந்து வந்தார். இவருக்கு 2 பெண் குழந்தைகள் இருக்கின்றன. இந்த நிலையில், மூன்றாவது ஆண் குழந்தை பிறந்தால், நேபாளத்தில் காத்மாண்டு நகரில் உள்ள பசுபதி நாதர் கோவிலுக்கு வந்து நேரில் வழிபடுவதாக நேர்ந்துள்ளார். அதன்படி அவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இதில் மகிழ்ச்சியும் உற்சாகமும் அடைந்த அவர் நேபாளத்துக்கு சென்று பசுபதி நாதர் கோவிலில் வழிபாடு நடத்த முடிவு செய்தார். தன்னோடு தனது நண்பர்களான அபிஷேக் குஷ்வாகா, விஷால் சர்மா, அனில்குமார் ராஜ்பர் ஆகிய 3 பேரையும் உடன் அழைத்துச்செல்லவும் தீர்மானித்தார். அதன்படி அவர்கள் கடந்த 10-ந்தேதி நேபாளத்துக்கு சென்றார்கள். அங்கு அவர்கள் பசுபதிநாதர் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டுள்ளனர்.

பாராகிளடைர் சாகசம்

அதன்பின்னர் சுற்றுலாத்தலமான பொகாரா சென்று பாராகிளைடரில் பறந்து சாகசம் செய்ய விரும்பி உள்ளார்கள். அதற்காக சென்றபோதுதான் அவர்களது விதி, வேறுரூபத்தில் விளையாடி விபத்து நேர்ந்து விட்டது.

பொகாராவில் தரையிறங்கும் முன்பாக அவர்கள் பயணித்த விமானம், அங்குள்ள சேதி ஆற்றின் கரையில் மோதி தீப்பிடித்து அதில் பயணித்த 72 பேரும் கூண்டோடு பலியாகி விட்டது பெருத்த சோகத்தை ஏற்படுத்தி விட்டது.

விமானம் தரையிறங்க முயற்சித்தபோது, அதை 97 வினாடிகள் ஓடக்கூடிய ஒரு வீடியோ படமாக சோனு ஜெய்ஸ்வால் எடுத்து, அதை தனது 'பேஸ்புக்' பக்கத்தில் வெளியிட்டுள்ளார் எனவும் தெரிய வந்துள்ளது. சோனு ஜெய்ஸ்வால் பற்றிய தகவல்களை அவரது நெருங்கிய உறவினரான விஜய் ஜெய்ஸ்வால் தெரிவித்தார். இந்த விபத்தில் பலியான 5-வது இந்தியர் பீகாரின் சீதாமர்ஹியைச் சேர்ந்த 26 வயதான சஞ்சய் ஜெய்ஸ்வால் ஆவார்.

உடல்களை கொண்டு வர ஏற்பாடு...

சோனு ஜெய்ஸ்வால் உள்ளிட்ட 4 பேரது உடல்களை உத்தரபிரதேசத்துக்கு கொண்டு வர தேவையான ஏற்பாடுகளை செய்யுமாறு அதிகாரிகளுக்கு மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, மாநில அரசு உயர் அதிகாரிகள், மத்திய வெளியுறவு அமைச்சகத்துடன் தொடர்பில் இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Next Story