ஜனாதிபதி மாளிகை அழைப்பிதழால் புதிய சர்ச்சை: இந்தியா பெயர் 'பாரத்' என்று மாற்றமா?


ஜனாதிபதி மாளிகை அழைப்பிதழால் புதிய சர்ச்சை: இந்தியா பெயர் பாரத் என்று மாற்றமா?
x

ஜி-20 மாநாடு தொடர்பான அழைப்பிதழில் ‘இந்தியா’வுக்கு பதில் ‘பாரத்’ என்று குறிப்பிடப்பட்டு இருப்பது புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பெயர் மாற்றத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.

புதுடெல்லி,

அடுத்த ஆண்டு நடக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

ஜி-20 மாநாடு

அதற்காக 28 எதிர்க்கட்சிகள் இணைந்து கூட்டணி அமைத்துள்ளன. அதற்கு 'இந்தியா' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. பாட்னா, பெங்களூரு ஆகிய இடங்களை தொடர்ந்து, மும்பையிலும் 'இந்தியா' கூட்டணி ஆலோசனை கூட்டம் நடந்துள்ளது.

இதற்கிடையே, ஜி-20 அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. டெல்லியில், வருகிற9 மற்றும் 10-ந்தேதிகளில், ஜி-20 நாடுகளின் மாநாட்டை நடத்துகிறது.

அதில், ஜி-20 நாடுகளின் தலைவர்கள் மட்டுமின்றி, சுமார் 40 நாடுகளின் பிரதிநிதி கள் கலந்து கொள்கிறார்கள்.

அழைப்பிதழ்

அவர்களுக்கு 9-ந்தேதி மாலை, ஜனாதிபதி திரவுபதி முர்மு விருந்து அளிக்கிறார். அதற்காக ஜனாதிபதி மாளிகை சார்பில் அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில், 'இந்திய ஜனாதிபதி' என்று குறிப்பிடப்படுவதற்கு பதிலாக, 'பாரத ஜனாதிபதி' என்று ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், ஜி-20 பிரதிநிதிகளுக்காக 'பாரதம்-ஜனநாயகத்தின் தாய்' என்ற கையேடு தயாரிக்கப்பட்டுள்ளது.

அதில், ''பாரதம் என்பது நாட்டின் அதிகாரபூர்வ பெயர். அப்பெயர், அரசியல் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 1946 முதல் 1948-ம் ஆண்டுவரை நடந்த விவாதங்களிலும் இடம்பெற்றுள்ளது'' என்று கூறப்பட்டுள்ளது.

'பாரதம்' என்று குறிப்பிட்டு இருப்பது, நன்றாக உணர்ந்து எடுத்த முடிவு என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

பெயர் மாற்ற திட்டமா?

இந்த அழைப்பிதழால் சர்ச்சை வெடித்துள்ளது. நாட்டின் பெயரை 'இந்தியா' என்பதற்கு பதிலாக, 'பாரத்' என்று மாற்ற மத்திய அரசு திட்டமிட்டு இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்ட தொடங்கி உள்ளன.

18-ந்தேதி தொடங்கும் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் இதுபற்றி விவாதம் நடத்தப்படும் என்ற தகவல்களும் பரவி வருகின்றன.

இந்த விவகாரத்தில், எதிர்க்கட்சிகளுக்கும், பா.ஜனதாவுக்கும் இடையே வார்த்தை யுத்தம் வெடித்துள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

அரசியல் சட்டத்தின் 1-வது பிரிவு, இந்தியாவான பாரதம், மாநிலங்களின் ஒன்றியம் என்று கூறப்பட்டுள்ளது. இப்போது, மாநிலங்களின் ஒன்றியமும் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறது.

மலிவான அரசியல்

பா.ஜனதாதான், 'இந்தியா ஒளிர்கிறது' என்ற கோஷத்தை முன்வைத்தது. டிஜிட்டல் இந்தியா, ஸ்டார்ட்அப் இந்தியா, புதிய இந்தியா என்று கூறிவந்தது. ஆனால் நாங்கள், 'பாரத ஒற்றுமை பயணம்' என்று சொல்லி வந்தோம்.

பிரதமர் மோடி, வரலாற்றை திரிக்கலாம், இந்தியாவை பிளவுபடுத்தலாம். ஆனால் நாங்கள் பயப்பட மாட்டோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், ''இந்தியா, பாரத் என்ற இரண்டுமே எங்களுக்கு சமம்தான். ஆனால், 'இந்தியா' என்ற பெயர் பா.ஜனதாவுக்கு அச்சத்தை உண்டாக்குவதால் மலிவான அரசியலில் ஈடுபடுகிறது'' என்று கூறியுள்ளார்.

மம்தா பானர்ஜி

மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கூறியிருப்பதாவது:-

இந்தியாவின் பெயர் மாற்றப்படுவதாக நான் கேள்விப்பட்டேன். ஆங்கிலத்தில் இந்தியா என்று சொல்கிறோம். இந்தியில் பாரதம் என்று சொல்கிறோம். இதில் புதிதாக என்ன இருக்கிறது?

இந்தியா என்றால் பாரதம் என்று நமக்கு தெரியும். ஆனால், உலகத்துக்கு 'இந்தியா' என்றால்தான் தெரியும். 'பாரதம்' என்று மட்டுமே கூறவேண்டும் என்று சொல்லும் அளவுக்கு என்ன நடந்து விட்டது?

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், ''இந்தியா கூட்டணியின் பெயரை 'பாரத்' என்று மாற்றிக்கொண்டால், 'பாரத்' என்ற பெயரையும் மத்திய அரசு மாற்றிவிடுமா?. இது தேசத்துரோகம்'' என்று கூறியுள்ளார்.

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், ''நாட்டின் பெயரை மாற்ற யாருக்கும் அதிகாரம் இல்லை'' என்று கூறியுள்ளார்.

ராஷ்டிரீய ஜனதாதள மூத்த தலைவர் மனோஜ் ஜா, மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா முப்தி ஆகியோரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பா.ஜனதா பதில்

இதற்கிடையே, எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு பா.ஜனதா பதில் அளித்துள்ளது. மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான், தனது சமூக வலைத்தள பக்கத்தில் அழைப்பிதழை பகிர்ந்துள்ளார். 'பிரசிடண்ட் ஆப் பாரத்' என்ற ேஹஷ்ேடக்கில் அவர் ''ஜனகன மன அதிநாயக ஜயகே பாரத பாக்ய விதாதா'' என்ற தேசிய கீதத்தை குறிப்பிட்டுள்ளார்.

இதன்மூலம், தேசிய கீதத்தில் 'பாரதம்' என்ற வார்த்தை இருப்பதாக சூசகமாக கூறியுள்ளார்.

மத்திய மந்திரி கிரிராஜ் சிங்கும் அந்த அழைப்பிதழை பகிர்ந்துள்ளார்.

ராஜீவ் சந்திரசேகர்

மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நமது நாட்டின் பெயர் பாரதம். அதில் எந்த சந்தேகமும் வேண்டாம். பாரத ஜனாதிபதி என்று கூறுவதில் காங்கிரசுக்கு என்ன பிரச்சினை? காங்கிரஸ் எல்லாவற்றையும் பிரச்சினை ஆக்குகிறது.

ஒருநாள், சனாதனத்தை ஒழிப்போம் என்று பேசுகிறது. மறுநாள், இன்ெனாரு பிரச்சினை எழுப்புகிறது.

பாரதத்தின் பெயரை 'பாரதம்' என்று குறிப்பிடாமல், வேறு எந்த வார்த்தையை பயன்படுத்துவது?

இவ்வாறு அவர் கூறினார்.

நாடாளுமன்றத்தில் விவாதமா?

''நாட்டின் பெயரை 'பாரதம்' என்று மாற்ற நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தில் விவாதம் நடத்தப்படுமா?'' என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு ராஜீவ் சந்திரசேகர், ''யூகங்களுக்கு நான் பதில் அளிக்க முடியாது. பொறுத்திருந்து பாருங்கள்'' என்று பதில் அளித்தார்.

அசாம் மாநில முதல்-மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மா கூறியிருப்பதாவது:-

பாரத குடியரசு என்று அழைப்பது மகிழ்ச்சி. நமது நாகரீகம், அமுத காலத்தை நோக்கி பீடுநடை போட்டு வருகிறது.

'பாரதம்' என்ற பெயர், அரசியல் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே பெயரில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அறியப்பட்டது. நமது நாடு, பாரதமாக இருந்தது, இருக்கிறது, இனிமேலும் இருக்கும்.

அரசியல் சட்டத்தில் உள்ளது

அமுத காலத்தில், நமது நாட்டின் பெயர் பாரதமாக அறியப்பட வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். ஆங்கில பெயர் ஏன் இருக்க வேண்டும்? அதில் காங்கிரசுக்கு என்ன பிரச்சினை?

'இந்தியா' என்ற பெயர், ஆங்கிலேயர்களால் பயன்படுத்தப்பட்டது. உண்மையான பெயர், பாரதம். அவர்களின் இளவரசர் கூட 'பாரத ஒற்றுமை யாத்திரை' என்றுதான் பெயர் சூட்டி இருந்தார்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பா.ஜனதா பொதுச்செயலாளர் தருண் சுக் கூறியதாவது:-

பாரதம் என்ற வார்த்தை புதியது அல்ல. பழங்காலத்தில் இருந்தே பயன்படுத்தப்படுகிறது. பாரத மாதா, வந்தே மாதரம் ஆகியவை நமது ரத்தத்தில் இருக்கின்றன. அரசியல் சட்டத்திலும் இருக்கிறது. நீங்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால் எதுவும் ஆகிவிடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆர்.எஸ்.எஸ். தலைவர்

விசுவ இந்து பரிஷத் செய்தித்தொடர்பாளர் வினோத் பன்சால், ''பாரத ஜனாதிபதி குறித்து பெருமைப்படுகிறோம். 'இந்தியா' என்ற வார்த்தையை மறப்போம்'' என்று கூறியுள்ளார்.

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், கடந்த 1-ந்தேதி ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், ''நமது நாட்டின் பெயரை 'இந்தியா' என்று கூறாமல், 'பாரதம்' என்று அழைக்க வேண்டும்'' என்று கூறியிருந்தார்.

அதைத்தொடர்ந்து, ஜனாதிபதி மாளிகை அழைப்பிதழில் 'பாரத்' என்று குறிப்பிடப்பட்டு இருப்பது சர்ச்சையை உருவாக்கி உள்ளது.


Next Story