கர்நாடகத்தில் கொரோனா தடுப்பு புதிய வழிகாட்டுதல் விரைவில் வெளியிடப்படும்; சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பேட்டி


கர்நாடகத்தில் கொரோனா தடுப்பு புதிய வழிகாட்டுதல் விரைவில் வெளியிடப்படும்; சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பேட்டி
x

கர்நாடகத்தில் கொரோனா பரவலை தடுக்க புதிய வழிகாட்டுதல் வெளியிடப்படும் என்று சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கூறியுள்ளார்.

பெலகாவி:

சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பெலகாவியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

மரபணு பரிசோதனை

சீனா, ஜப்பான் உள்பட சில நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. சீனாவில் ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக தகவல் வந்துள்ளது. அதனால் நமது நாட்டில் தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்படி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 3-வது டோஸ் தடுப்பூசி போட அரசு சார்பில் முன்னுரிமை அளிக்கப்படும்.

மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதால் புதிதாக கொரோனா பாதிப்புக்கு ஆளாகிறவர்களின் சளி மாதிரி மரபணு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்படும். இதுதொடர்பாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையில் ஆலோசனை நடத்தி சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படும். கொரோனா பரவலை தடுக்க சில முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது.

2 டோஸ் தடுப்பூசி

பெங்களூரு சர்வதேச விமான நிலையத்திற்கு அதிக எண்ணிக்கையில் பயணிகள் வெளிநாடுகளில் இருந்து வருகிறார்கள். அங்கு கண்காணிப்புகளை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். 100 சதவீதம் பேருக்கு 2 டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஆனால் பலர் 3-வது டோஸ் தடுப்பூசி போட்டு கொள்ளவில்லை. அத்தகையவர்கள் தாமாக முன்வந்து 3-வது டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.

மத்திய சுகாதாரத்துறையின் வழிகாட்டுதலை பெற்று கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும். எத்தகைய சூழ்நிலையையும் எதிர்கொள்வதற்கு தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். கொரோனா தடுப்பு வழிகாட்டுதல் விரைவில் வெளியிடப்படும்.

இவ்வாறு சுதாகர் கூறினார்.


Next Story