பெட்ரோல் விற்பனை நிலையத்திற்கு ரூ.2 ஆயிரம் நோட்டுகளுடன் வருவோருக்கு புதிய கட்டுப்பாடு; உரிமையாளர் நடவடிக்கையால் பரபரப்பு
பெட்ரோல் விற்பனை நிலையத்திற்கு ரூ.2 ஆயிரம் நோட்டுகளுடன் வருவோருக்கு புதிய கட்டுப்பாடு
பெங்களூரு:
நாடு முழுவதும் ரூ.2 ஆயிரம் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து வந்தது. இந்த நிலையில் ரிசர்வ் வங்கி திடீரென ரூ.2 ஆயிரம் நோட்டுகளை ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும் ரூ.2 நோட்டுகளை வைத்திருப்பவர்கள் வருகிற செப்டம்பர் 30-ந் தேதிக்குள் வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்றும் கூறி காலக்கெடு விதித்துள்ளது. இந்த நிலையில் பெங்களூருவில் ரூ.2 ஆயிரம் நோட்டுகள் வைத்திருப்பவர்கள் பெட்ரோல் விற்பனை நிலையங்களில் குவிந்து வருகிறார்கள். அவர்கள் ரூ.200-க்கு அல்லது ரூ.300-க்கு பெட்ரோல் போட்டுவிட்டு ரூ.2 ஆயிரம் நோட்டை கொடுக்கிறார்கள். இதை கட்டுப்படுத்த முடியாமல் பெட்ரோல் விற்பனை நிலைய உரிமையாளர்கள் திணறி வருகிறார்கள். இந்த நிலையில் பெங்களூரு கோரகுண்டேபாளையாவில் உள்ள ஒரு பெட்ரோல் விற்பனை நிலையத்தில் ஒரு புதுவித கட்டுப்பாடு விதித்துள்ளனர். அதாவது ரூ.2 ஆயிரம் நோட்டுகள் பெறப்படும் என்றும், ஆனால் ரூ.1,500-க்கு பெட்ரோல் அல்லது டீசல் போட்டால் மட்டுமே ரூ.2 ஆயிரம் நோட்டை வாங்குவோம் என்றும் அறிவிப்பு பலகைகளை வைத்துள்ளனர். இதன்காரணமாக அந்த பெட்ரோல் விற்பனை நிலையத்திற்கு ரூ.2 ஆயிரம் நோட்டுகளுடன் வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறைந்திருப்பதாக உரிமையாளர் கூறியுள்ளார். இதுதொடர்பாக புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. இது பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.