அடுத்த மாதம் 18-ந் தேதி தேர்தல்: ஜனாதிபதி வேட்பாளர் யார்? -அரசியல் கட்சிகள் தீவிர ஆலோசனை
ஜனாதிபதி வேட்பாளர் குறித்து அரசியல் கட்சிகள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளன. இந்த நிலையில் கட்சி தலைவர் களுடன் பேச்சு நடத்த பா.ஜனதா குழு அமைத்து இருக்கிறது.
புதுடெல்லி,
நாட்டின் அடுத்த ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான அரசியல் கட்சிகளின் நடவடிக்கைகள் சூடுபிடிக்க தொடங்கி உள்ளன.
ஜனாதிபதி தேர்தல்
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் அடுத்த மாதம் 24-ந் தேதி முடிகிறது. புதிய ஜனாதிபதி ஜூலை 25-ந் தேதி பதவி ஏற்க வேண்டும்.
இந்த நிலையில் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல், அடுத்த மாதம் 18-ந் தேதி நடத்தப்படும் என்று தேர்தல் கமிஷன் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்த தேர்தலில் வேட்புமனு தாக்கல் வரும் 15-ந் தேதி (புதன்கிழமை) தொடங்குகிறது. வேட்புமனு தாக்கலுக்கு 29-ந் தேதி கடைசி நாள்.
ஆளும் பா.ஜ.க. நிலை
ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க. கூட்டணிக்கு 49 சதவீத வாக்குகள் உள்ளன. அந்த கூட்டணியே வேட்பாளரை நிறுத்தி வெற்றி பெறச்செய்வதற்கு 51 சதவீத ஓட்டுகள் வேண்டும். இந்த நிலையில் பா.ஜ.க.வின் பார்வை, தங்களது கூட்டணியிலும், காங்கிரஸ் கூட்டணியிலும் இடம் பெறாத ஆந்திராவின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், ஒடிசாவின் பிஜூ ஜனதாதளம் ஆகியவற்றின் மீது படிந்துள்ளது. அந்த கட்சிகளின் ஆதரவை பெற்றுவிட்டால் தனது கூட்டணி சார்பில் வேட்பாளரை நிறுத்தி, பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெற முடியும்.
ஆனால் இதற்கிடையே, ஜனாதிபதி வேட்பாளர் விஷயத்தில் எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளுடனும் பேசி ஒருமித்த கருத்தை ஏற்படுத்தும் முயற்சியில் மத்தியில் ஆளும் பா.ஜ.க. இறங்கி உள்ளது.
பா.ஜ.க. குழு
அந்த வகையில் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அங்கீகாரம் அளித்து 2 தலைவர்கள் கொண்ட குழுவை பா.ஜ.க., நேற்று அமைத்துள்ளது.
இந்த குழுவில் கட்சியின் தலைவர் ஜே.பி.நட்டாவும், ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங்கும் இடம் பெற்றுள்ளனர்.
இது தொடர்பாக பா.ஜ.க. விடுத்துள்ள அறிக்கையில், "ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டாவும், மத்திய மந்திரி ராஜ்நாத் சிங்கும் ஆளும் பா.ஜ.க. கூட்டணி மற்றும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுடனும், பிற கட்சிகளுடனும், சுயேச்சை உறுப்பினர்களுடனும் பேச்சு நடத்துவார்கள். அவர்கள் விரைவில் இந்த பேச்சு வார்த்தையை தொடங்குவார்கள்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2017-ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின்போது, பா.ஜ.க. வேட்பாளராக ராம்நாத் கோவிந்தை முடிவு செய்து விட்டு கடைசியில்தான் தங்களை நாடியதாக எதிர்க்கட்சிகள் குறை கூறின. ஆனால் தற்போது முன்கூட்டியே எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளுடனும் ஆலோசனை நடத்துவதற்கு 2 பேர் அடங்கிய குழுவை பா.ஜ.க. அமைத்து இருப்பது முக்கியத்துவம் பெறுகிறது. இதனால் போட்டியின்றி ஒருமனதாக புதிய ஜனாதிபதியை தேர்வு செய்யவும் ஒரு வழி பிறந்துள்ளது.
தி.மு.க. ஆலோசனை
ஜனாதிபதி தேர்தலில், தமிழ்நாட்டில் ஆளுங்கட்சியாக உள்ள தி.மு.க.வுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. நாடாளுமன்ற மக்களவையில் 24 எம்.பி.க்களுடன் மூன்றாவது பெரிய கட்சியாக தி.மு.க. உள்ளது. மாநிலங்களவையிலும் 10 எம்.பி.க்களை அந்த கட்சி கொண்டுள்ளது.
தேசிய அளவில் காங்கிரஸ் கூட்டணியில் தி.மு.க. இருந்தாலும், தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில் கூட்டணிக்கு தலைமை ஏற்பது தி.மு.க.தான் என்பதால் இந்த கட்சியின் முடிவு முக்கியத்துவம் பெறுகிறது.
இந்த நிலையில், தி.மு.க. தலைவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் நேற்று 20 நிமிடங்கள் ஆலோசனை நடத்தினார். இதில் தி.மு.க. பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி., அமைச்சர்கள் கே.என்.நேரு, பொன்முடி மற்றும் துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அழைப்பை ஏற்று அவர் நிறுத்தும் வேட்பாளரை ஆதரிக்கலாமா என்பது குறித்தும், மம்தா அழைப்பு பற்றியும் விவாதிக்கப்பட்டது. அதே நேரத்தில் கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
காங்கிரஸ் நிலை
ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிராக பொது வேட்பாளரை தங்களது கூட்டணி நிறுத்தி விட்டால், அது 2024-ம் ஆண்டு நடக்க உள்ள நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் சாதகமான பலனைத்தரும் என்பது காங்கிரசின் நம்பிக்கை ஆகும். எனவே அதற்கு ஏற்ற வகையில் காங்கிரஸ் கட்சி காய்களை நகர்த்த தொடங்கி உள்ளது.
அந்த வகையில், ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பு வெளியான சூட்டோடு சூடாக எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்தும் நடவடிக்கையில் காங்கிரஸ் கட்சி இறங்கி உள்ளது. எதிர்க்கட்சி தலைவர்களுடன் கலந்து பேசுவதற்கு கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவருமான மல்லிகார்ஜூன கார்கேயை அந்த கட்சி நியமித்துள்ளது.
ஒரே நாளில் 2 கூட்டம்
பா.ஜ.க. கூட்டணிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள்வது எந்த அளவுக்கு சாத்தியம் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக காங்கிரஸ் கட்சி டெல்லியில் 15-ந் தேதி காலை 10 மணிக்கு ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்த உள்ளது. இதில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட மூத்த எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து பேச முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஆனால் அதே நாளில் டெல்லியில் பகல் 3 மணிக்கு எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டத்துக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும், மேற்கு வங்காள முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட 14 முக்கிய எதிர்க்கட்சி தலைவர்களுக்கு கடிதம் எழுதி உள்ளார். ஆனால் இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி அதிருப்தி வெளியிட்டுள்ளார். எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டத்தை கூட்டும் மம்தாவின் நடவடிக்கை தன்னிச்சையானது என அவர் சாடி உள்ளார்.
காங்கிரஸ் நடத்துகிற கூட்டத்தில் கலந்து கொள்கிறவர்கள், மம்தா பானர்ஜியின் கூட்டத்தில் பங்கேற்பார்களா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
ஆம் ஆத்மி ஆலோசனை
இத்தனை பரபரப்புக்குமத்தியில் டெல்லி, பஞ்சாப் மாநிலங்களை ஆளும் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் சிங், நேற்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை சந்தித்து ஜனாதிபதி தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினார்.
இப்படி அரசியல் கட்சிகள் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக தீவிர ஆலோசனையில் இறங்கி இருப்பது நாட்டின் விவாத பொருளாக மாறி இருக்கிறது. இந்த ஆலோசனைகளின் முடிவு, அடுத்த சில நாட்களில் தெரிய வந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது.