லண்டன் இந்திய தூதரகம் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் - என்.ஐ.ஏ. விசாரணை
லண்டனில் உள்ள இந்திய தூதரகம் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர்.
டெல்லி,
பஞ்சாப் மாநிலத்தில் கடந்த பிப்ரவரி 23-ந்தேதி, காலிஸ்தான் ஆதரவு மத போதகரான அம்ரித்பால் சிங்கின் (வயது 29) ஆதரவாளர்கள், அஜ்னாலாவில் உள்ள காவல்நிலையத்தை முற்றுகையிட்டு, சிறையில் உள்ள அம்ரித்பால் சிங்கின் ஆதரவாளரை விடுவிக்க முயன்றனர். இந்த சம்பவம் பஞ்சாப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வாரிஸ் பஞ்சாப் டி காலிஸ்தான் ஆதரவு அமைப்பின் தலைவராக அம்ரித்பால் சிங் செயல்பட்டு வந்தார்.
காவல்நிலையத்தை வாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் முற்றுகையிட்ட அம்ரித்பால் சிங்கின் ஆதரவாளர்கள் தங்கள் ஆதரவாளரை விடுவிக்க வேண்டும் என்று மிரட்டல் விடுத்தனர். இது தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானது. மேலும், பஞ்சாப்பில் காலிஸ்தான் ஆதரவு குழுக்களும் அதிகரிக்கத்தொடங்கின.
இதையடுத்து, பஞ்சாப் மாநிலத்திற்கு துணை ராணுவப்படையினர் அனுப்பி வைக்கப்பட்ட காலிஸ்தான் ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டனர். ஆனால், அம்ரித்பால் தலைமறைவானார். அவரை தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதனிடையே, இங்கிலாந்து நாட்டின் லண்டனில் உள்ள இந்திய தூதரகம் முன் கடந்த மார்ச் 20-ம் தேதி காலிஸ்தான் பிரிவினைவாத ஆதரவாளர்கள் குவிந்தனர். அவர்கள் இந்தியாவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். மேலும், லண்டன் இந்திய தூதரகத்தில் ஏற்றப்பட்டிருந்த இந்திய தேசியக்கொடியை அகற்றி காலிஸ்தான் கொடியை ஏற்றினர்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. லண்டன் இந்திய தூதரகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாமல் இருந்ததால் அங்கு சென்ற காலிஸ்தான் ஆதரவாளர்கள் அம்ரித்பாலுக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பி தூதகரத்தில் கொடிக்கம்பத்தில் பறந்துகொண்டிருந்த இந்திய தேசியக்கொடியை கீழே இறக்கி காலிஸ்தான் கொடியை பறக்கவிட்டனர்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்ச்கம் கண்டம் தெரிவித்தது.
இந்நிலையில், இங்கிலாந்து லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் காலிஸ்தான் ஆதரவாளர்கல் போராட்டத்தில் ஈடுபட்டது மற்றும் அவர்கள் இந்திய தேசியக்கொடியை அகற்றிவிட்டு காலிஸ்தான் தேசியக்கொடியை ஏற்றிய சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்த உள்ளது.