நிகில் குமாரசாமி ராஜினாமா செய்தார்
ஜனதாதளம் (எஸ்) கட்சி இளைஞர் அணி தலைவர் நிகில் குமாரசாமி ராஜினாமா செய்தார். அந்த பதவி பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பெங்களூரு:-
நிகில் குமாரசாமி
கர்நாடக ஜனதாதளம் (எஸ்) கட்சியின் இளைஞர் அணி தலைவராக, அக்கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான குமாரசாமியின் மகனும், நடிகருமான நிகில் குமாரசாமி பதவி வகித்து வந்தார். அவர் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் ராமநகர் தொகுதியில் போட்டியிட்டார்.
ஆனால் அவர் தோல்வியை சந்தித்தார். ஏற்கனவே நிகில் குமாரசாமி கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் மண்டியா தொகுதியில் போட்டியிட்டு சுயேச்சையாக களமிறங்கிய நடிகை சுமலதா அம்பரீசிடம் தோல்வி அடைந்திருந்்தார். தொடர் தோல்விகளை நிகில் குமாரசாமி சந்தித்ததால், அவரது தந்தை குமாரசாமியும், அவரது தாத்தா தேவேகவுடாவும் அதிர்ச்சியில் உள்ளனர்.
ராஜினாமா
தேர்தல் தோல்வியை தொடர்ந்து நிகில் குமாரசாமி, கட்சியின் இளைஞர் அணி தலைவர் பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக தகவல் வெளியானது. அதன்படி அவர் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்து, கட்சியின் மாநில தலைவரான சி.எம்.இப்ராகிமிற்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில், நான் எனது இளைஞர் அணி தலைவர் பதவியை ராஜினாமா செய்கிறேன். எந்த சூழ்நிலையிலும் கட்சியுடன் நின்று தலைமைக்கு கட்டுப்பாட்டு பணியாற்றுவேன். தேர்தலில் தோல்வி என்பது இறுதியானது அல்ல. சட்டசபை தேர்தலில் கட்சி எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. கட்சியை மீண்டும் கட்டியெழுப்பும் நோக்கில் எனது பதவியை ராஜினாமா செய்கிறேன். கட்சியை பலப்படுத்தும் பணியில் ஈடுபட நான் எப்போதும் தயங்கமாட்டேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு பதவி?
இதனால் ஜனதாதளம் (எஸ்) கட்சியின் இளைஞர் அணி தலைவர் பதவிக்கு பொருத்தமானவர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதாவது தேவேகவுடாவின் மற்றொரு மகனான எச்.டி.ரேவண்ணாவின் மகனும், ஹாசன் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பெயர் அடிபடுகிறது.
அதுபோல் யாதகிரி மாவட்டம் குர்மித்கல் தொகுதி எம்.எல்.ஏ. சரண்கவுடா கந்தகுருவும் ஜனதாதளம் (எஸ்) கட்சி இளைஞர் அணி தலைவர் பதவிக்கான போட்டியில் உள்ளார். இதில் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு இளைஞர் அணி பதவி வழங்க குமாரசாமி சம்மதம் தெரிவிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.