புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் திறக்க தடை இல்லை -சுப்ரீம் கோர்ட்


புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் திறக்க தடை இல்லை -சுப்ரீம் கோர்ட்
x

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை ஜனாதிபதி திறக்க வலியுறுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதன் மூலம் நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் திறக்க தடை இல்லை.

புதுடெல்லி,

டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி நாளை (ஞாயிற்றுக்கிழமை) திறந்துவைக்கிறார்.

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை ஜனாதிபதி திரவுபதி முர்மு திறக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன.

பிரதமர் திறக்க எதிர்ப்பு

புதிய நாடாளுமன்றத்தை பிரதமர் மோடி தான் திறந்துவைப்பார் என மத்திய அரசு சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் திறப்புவிழாவை புறக்கணிப்பதாக காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகள் கூட்டாக அறிவித்துள்ளன.

எதிர்க்கட்சிகளின் இந்த அறிவிப்புக்கும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. தேசிய ஜனநாய கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள், முன்னாள் அரசு அதிகாரிகள் எதிர்க்கட்சிகளின் அறிவிப்புக்கு அதிருப்தி தெரிவித்து உள்ளனர்.

பொதுநல மனு

இதற்கிடையே கன்னியாகுமரியைச் சேர்ந்த வக்கீல் ஜெய்சுகின் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு பொதுநல மனுவை தாக்கல் செய்தார்.

அதில், புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறப்பதற்கு ஜனாதிபதிக்கு அழைப்பு விடுக்காதது அவரது மதிப்பை குறைப்பது மட்டுமின்றி அரசமைப்பு சட்டத்தையும் மீறுவதாக உள்ளது. எனவே, புதிய நாடாளுமன்றத்தை ஜனாதிபதி முர்முவை கொண்டு திறக்க மக்களவை செயலாளருக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.

நீதிபதிகள் கேள்வி

இந்த மனுவை நீதிபதிகள் ஜே.கே.மகேஷ்வரி, பி.எஸ்.நரசிம்மா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது, இந்த விவகாரத்தில் ஆர்வம் காட்டவேண்டிய அவசியம் என்ன என நீதிபதிகள் கேட்டனர்.

அதற்கு வக்கீல் ஜெய்சுகின், அரசமைப்பு சட்டம் 79-வது பிரிவில் நாடாளுமன்றம் என்பது ஜனாதிபதியையும், இரு அவைகளையும் கொண்டது என குறிப்பிடப்பட்டுள்ளது என பதில் அளித்தார். புதிய நாடாளுமன்ற திறப்புவிழாவுக்கும், அரசமைப்பு சட்டத்தின் 79-வது பிரிவுக்கும் என்ன தொடர்பு என நீதிபதிகள் மீண்டும் கேட்டனர்.

'விசாரிக்க முடியாது'

அதற்கு வக்கீல் ஜெய்சுகின், நாடாளுமன்றத்தின் தலைவராக உள்ள ஜனாதிபதிதான் புதிய நாடாளுமன்றத்தை திறந்துவைக்க வேண்டும் என வாதிட்டார். அதற்கும், திறப்புவிழாவுக்கும் என்ன தொடர்பு என நீதிபதிகள் கேட்டதுடன், ரிட் மனு தாக்கல் செய்ததற்கான காரணத்தை நாங்கள் அறிவோம்.

இதுபோன்ற மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள முடியாது. அபராதம் விதிக்கவில்லை என்ற நன்றியுடன் இருங்கள் என தெரிவித்து தள்ளுபடி செய்ய முற்பட்டபோது, மனுவை திரும்பப்பெறுவதாக மனுதாரர் தெரிவித்தார்.

தள்ளுபடி

அதற்கு மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, மனுதாரர் ஐகோர்ட்டை நாட வாய்ப்புள்ளது என்பதால், மனுவை திரும்பப்பெற அனுமதிக்க கூடாது என வாதிட்டார்.

ஐகோர்ட்டை நாட மாட்டேன் என மனுதாரர் தெரிவித்ததை பதிவு செய்துகொண்ட சுப்ரீம் கோர்ட்டு, மனுவை திரும்பப்பெற அனுமதி அளித்து தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

பிரதமர் திறக்க தடை இல்லை

சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவைத் தொடர்ந்து புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் திறக்க எந்த தடையும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story