ஒடிசாவில் நடந்த ரெயில் விபத்தில் கர்நாடகத்தை சேர்ந்தவர்கள் உயிர் இழக்கவில்லை- மந்திரி சந்தோஷ் லாட் பேட்டி


ஒடிசாவில் நடந்த ரெயில் விபத்தில் கர்நாடகத்தை சேர்ந்தவர்கள் உயிர் இழக்கவில்லை- மந்திரி சந்தோஷ் லாட் பேட்டி
x
தினத்தந்தி 5 Jun 2023 12:15 AM IST (Updated: 5 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஒடிசாவில் நடந்த ரெயில் விபத்தில் கர்நாடகத்தை சேர்ந்தவர்கள் யாரும் உயிர் இழக்கவில்லை என்று மந்திரி சந்தோஷ் லாட் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு:-

மந்திரி ஒடிசா பயணம்

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் அருகே நடந்த ரெயில் விபத்தில் 288-க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்துள்ளனர். சிக்கமகளூருவில் இருந்து சென்ற 110 பேர் உயிர் தப்பினர். அதே நேரத்தில் கர்நாடகத்தை சேர்ந்த கைப்பந்து விளையாட்டு வீரர்கள் 32 பேரும் ஒடிசாவில் சிக்கி இருந்தனர். இதையடுத்து, ஒடிசாவில் சிக்கிய கர்நாடகத்தை சேர்ந்தவர்களை மீட்க முதல்-மந்திரி சித்தராமையாவின் உத்தரவின் பேரில் தொழிலாளர் துறை மந்திரி சந்தோஷ் லாட் நேற்று முன்தினம் பெங்களூருவில் இருந்து தனி விமானத்தில் ஒடிசா புறப்பட்டு சென்றார்.

அவருடன் 4 அதிகாரிகளும் சென்றிருந்தார்கள். நேற்று முன்தினம் மாலையே ஒடிசா சென்ற மந்திரி சந்தோஷ் லாட் கைப்பந்து விளையாட்டு வீரர்களை சந்தித்து பேசியதுடன், அவர்கள் பெங்களூருவுக்கு திரும்புவதற்கான நடவடிக்கைகளை எடுத்ததுடன், விமானத்தில் வருவதற்கான ஏற்பாடுகளையும் செய்தார். ரெயில் விபத்தில் கர்நாடகத்தை சேர்ந்தவர்கள் யாரும் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்களா? என்பது பற்றியும் கேட்டு அவர் அறிந்து கொண்டார். பின்னர் ஒடிசாவில் வைத்து நேற்று மந்திரி சந்தோஷ் லாட் நிருபர்களிடம் கூறியதாவது:-

விமானத்தில் செல்ல ஏற்பாடு

முதல்-மந்திரி சித்தராமையாவின் உத்தரவின் பேரில் ரெயில் விபத்தில் சிக்கிய கர்நாடகத்தை சேர்ந்தவர்களை பாதுகாப்பாக அழைத்து செல்ல வந்துள்ளேன். முதற்கட்டமாக கைப்பந்து விளையாட்டு வீரர்கள் 32 பேர் பெங்களூருவுக்கு திரும்பி உள்ளனர். இங்குள்ள பூரி ஜெகன்நாத் கோவில் தரிசனத்திற்காக வந்திருந்த கர்நாடகத்தை சேர்ந்த 12 பேர் புவனேஷ்வரில் இருந்து பெங்களூருவுக்கு விமானத்தில் செல்வதற்கான ஏற்பாடுகளையும் செய்து கொடுத்துள்ளேன்.

ரெயில் விபத்தில் சிக்கி காயம் அடைந்த 750-க்கும் மேற்பட்டோர் வெவ்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அந்த ஆஸ்பத்திரிகளுக்கு சென்று காயம் அடைந்தவர்களிடம் விசாரித்தேன். அவர்களில் யாரும் கர்நாடகத்தை சேர்ந்தவர்கள் இல்லை என்பது தெரியவந்துள்ளது. இதன்மூலம் கர்நாடகத்தை சேர்ந்தவர்கள் யாருக்கும் ரெயில் விபத்தில் காயம் ஏற்படவில்லை.

யாரும் உயிர் இழக்கவில்லை

ரெயில் விபத்தில் 290-க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்துள்ளனர். அந்த உடல்கள் வைக்கப்பட்டு இருந்த பகுதிக்கு சென்றும் விசாரித்தேன். அவர்களில் யாரும் கர்நாடகத்தை சேர்ந்தவர்கள் இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கர்நாடகத்தை சேர்ந்தவர்கள் யாரும் ரெயில் விபத்தில் உயிர் இழக்கவில்லை. இந்த விஷயத்தில் தேவையில்லாமல் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம்.

சிக்கமகளூருவை சேர்ந்த 110 கன்னடர்களும் பாதுகாப்பாக உள்ளனர். இங்குள்ள ரெயில்வே அதிகாரிகள், ஒடிசா மாநில அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி உள்ளேன். கர்நாடகத்தை சேர்ந்தவர்கள் யாரும் ரெயில் விபத்தில் சிக்கி இருக்கிறார்களா? என்பது பற்றிய தகவல்களையும் பெற்றுள்ளேன். ரெயில் விபத்தில் சிக்கியவர்களை பத்திரமாக கர்நாடகத்திற்கு அனுப்பி வைப்பது அரசின் பொறுப்பாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story