கா்நாடகத்தில் இரட்டை என்ஜின் அரசால் எந்த பணிகளும் நடக்கவில்லை; டி.கே.சிவக்குமார் குற்றச்சாட்டு


கா்நாடகத்தில் இரட்டை என்ஜின் அரசால் எந்த பணிகளும் நடக்கவில்லை; டி.கே.சிவக்குமார் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 4 April 2023 12:15 AM IST (Updated: 4 April 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

கா்நாடகத்தில் இரட்டை என்ஜின் அரசால் எந்த பணிகளும் நடக்கவில்லை என்று டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.

பெங்களூரு:

காங்கிரசில் சேர்ந்தார்

பா.ஜனதா கட்சியில் எம்.எல்.ஏ.வாக இருந்தவர் என்.ஒய்.கோபலகிருஷ்ணா. அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில் கோபாலகிருஷ்ணா, பெங்களூரு குயின்ஸ்ரோட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் டி.கே.சிவக்குமார், சித்தராமையா ஆகியோரது முன்னிலையில் காங்கிரசில் சேர்ந்தார். அப்போது டி.கே.சிவக்குமார் பேசியதாவது:-

பா.ஜனதாவை சேர்ந்த கோபாலகிருஷ்ணா எந்த விதமான நிபந்தனையும் விதிக்காமல் காங்கிரசில் சேர்ந்துள்ளார். சாதாரண கட்சி தொண்டராக பணியாற்ற தயாராக உள்ளதாக அவர் கூறியுள்ளார். எம்.எல்.ஏ.வாக இருக்கும் நீங்கள் ஏன் காங்கிரசுக்கு வர விரும்புகிறீர்கள் என்று நான் கேட்டேன். இறப்பதற்கு முன்பு காங்கிரஸ்காரனாக சாக வேண்டும் என்று கூறினார்.

இரட்டை என்ஜின் அரசு

இவ்வாறு காங்கிரசின் கொள்கை-கோட்பாடுகளை கொண்டுள்ள தலைவர்கள் மீண்டும் கட்சிக்கு திரும்புகிறார்கள். அவருடன் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் காங்கிரசில் சேர்ந்துள்ளனர். ஜனதாதளம் (எஸ்) கட்சியை சேர்ந்த சிவலிங்கேகவுடா வருகிற 9-ந் தேதி தனது தொகுதியில் நடைபெறும் நிகழ்ச்சியில் காங்கிரசில் சேர உள்ளார். முதலில் கட்சியில் சேர விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தியுள்ளேன்.

பா.ஜனதா, ஜனதாதளம் (எஸ்) கட்சியினர் தாமாக முன்வந்து காங்கிரசில் சேருகிறார்கள். பா.ஜனதா அரசின் ஊழல்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு போன்றவற்றால் மக்கள் வெறுப்படைந்து உள்ளனர். இந்த இரட்டை என்ஜின் அரசால் எந்த பணிகளும் நடைபெறவில்லை. பா.ஜனதா, ஜனதா தளம் (எஸ்) கட்சிகளை சேர்ந்த இன்னும் பல தலைவா்கள் காங்கிரசில் சேர விருப்பம் தெரிவித்துள்ளனர்.

கலாசார காவல்

எனது கனகபுரா தொகுதியில் உள்ள சாத்தனூரில் கலாசார காவல் பெயரில் ஒரு கொலை நடந்துள்ளது. இந்த கலாசார காவல் நிகழ்வுக்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா ஆகியோர் தான் பொறுப்பு. அவர்கள் தங்களின் பதவியை

ராஜினாமா செய்ய வேண்டும். தேர்தல் நேரத்தில் இத்தகைய செயல்களில் ஈடுபடுவது சரியல்ல. கொலை செயலில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். அதிகம் பேர் கட்சிக்கு வருவதால் அனைவருக்கும் பதவி கொடுக்க இயலாது என்பதை அவர்களிடம் கூறுகிறோம். எங்கள் கட்சியில் தேர்தலில் போட்டியிட அதிகம் பேர் உள்ளனர். கட்சி அலுவலக கட்டுமான பணிக்காக விருப்ப மனு வழங்கியவர்களிடம் ரூ.2 லட்சம் நன்கொடையாக பெற்றோம். அவர்களை நாங்கள் எந்த வகையிலும் ஏமாற்றவில்லை.

முடிவாகவில்லை

ராகுல் காந்தி வருகிற 9 அல்லது 10-ந் தேதி கர்நாடகம் வருகிறார். அவரது பயணம் குறித்து இன்னும் முடிவாகவில்லை. இட ஒதுக்கீடு விஷயத்தில் அரசின் முடிவை கண்டித்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த போராட்டங்களை நாங்கள் தூண்டி விடவில்லை.

இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.


Next Story