பெங்களூருவில் ஆக்கிரமிப்பை அகற்றுவதில் பாரபட்சமின்றி நடவடிக்கை -மந்திரி ஆர்.அசோக் உறுதி
பெங்களூருவில் ஆக்கிரமிப்பை அகற்றுவதில் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுப்பதாக மந்திரி ஆர்.அசோக் தெரிவித்துள்ளார்.
மைசூரு:
மந்திரி அசோக் பேட்டி
கர்நாடக வருவாய் துறை மந்திரி ஆர்.அசோக் ஒருநாள் சுற்றுப்பயணமாக நேற்று மைசூருவுக்கு வந்தார். இதையடுத்து மைசூருவில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- பெங்களூரு நகரில் இதுவரை இல்லாத அளவுக்கு வரலாறு காணாத மழை பெய்துள்ளது. இதனால் குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்து மக்கள் கடும் அவதிக்குள்ளாகினார்கள். ராஜகால்வாய், ஏரி நிலங்களை ஆக்கிரமிப்பு செய்ததால் தான் குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்து பெருமளவு சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் பெங்களூரு நகரில் ராஜகால்வாய், ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரமாக இந்த பணி நடந்து வருகிறது.
பாரபட்சமின்றி நடவடிக்கை
பெங்களூரு நகரின் வளர்ச்சிக்காக கோர்ட்டில் அனுமதி பெற்று ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடித்து அகற்றி வருகிறோம். ராஜகால்வாய், ஏரி நிலங்களை ஆக்கிரமித்தவர்கள் ஏழை, பணக்காரர்கள் யாராக இருந்தாலும் பாரபட்சம் பார்க்காமல் அவர்களது கட்டிடங்கள் இடித்து அகற்றப்படும். கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்து, ஆக்கிரமிப்புகளை நிரந்தரமாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இதுதொடர்பாக அட்வகேட் ஜெனரலுடன் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளோம்.
பெங்களூரு நகரின் நலனை குறிக்கோளாக கொண்டு செயல்படுகிறோம். ஆக்கிரமிப்புகளை அகற்றும் விஷயத்தில் சமரசம் செய்ய மாட்டோம். அரசு பற்றி ஏதாவது குறை சொல்ல வேண்டும் என்பதற்காக காங்கிரஸ் கட்சியினர் பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்கள். காங்கிரஸ் ஆட்சியில் தான் ராஜகால்வாய், ஏரி நிலங்கள் ஆக்கிரமிக்க அனுமதி வழங்கப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.