தேர்தல் நடத்தை விதிமீறல்: பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களுக்கு நோட்டீஸ்
தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் வருகிற மே மாதம் 10-ந் தேதி தேர்தல் நடைபெறுவதையொட்டி, நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. இதனால் தேர்தல் அதிகாரிகள் தனிப்படை அமைத்து பணம், பரிசு பொருட்கள் வினியோகம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் பரிசு பொருட்கள், பணத்தை பறிமுதல் செய்து வருகின்றனர். மேலும் தேர்தல் நேரத்தில் வேட்பாளர்கள் பேசுவதற்கு சில விதிமுறைகள் உள்ளது. அதேபோல தேர்தலில் வாக்கு சேகரிப்பதற்கும் விதிமுறை விதிக்கப்பட்டுள்ளது. அந்த விதிமுறைகளை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் குடகு மாவட்டத்தை சேர்ந்த பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களான கே.ஜி.போப்பையா மற்றும் அப்பச்சு ரஞ்சன் தேர்தல் விதிமுறையை மீறி பிரசாரம் செய்ததாக கூறப்படுகிறது. இவர்களின் தேர்தல் பிரசாரம் குறித்து காங்கிரஸ் தரப்பில் மாவட்ட தேர்தல் கண்காணிப்பு அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து தேர்தல் அதிகாரிகள், அப்பச்சு ரஞ்சன் மற்றும் போப்பையாவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இந்த நோட்டீசிற்கு அவர்கள் விளக்கம் அளிக்கவில்லை என்றால், நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.