'ஹேஸ்டெக்' தடுப்பு உத்தரவுகளுக்கு எதிராக டுவிட்டர் நிறுவனம் தொடர்ந்த வழக்கில் மத்திய அரசுக்கு நோட்டீசு; கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு


ஹேஸ்டெக் தடுப்பு உத்தரவுகளுக்கு எதிராக டுவிட்டர் நிறுவனம் தொடர்ந்த வழக்கில் மத்திய அரசுக்கு நோட்டீசு; கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு
x

‘ஹேஸ்டெக்’ தடுப்பு உத்தரவுகளுக்கு எதிராக டுவிட்டர் நிறுவனம் தொடர்ந்த வழக்கில் மத்திய அரசுக்கு நோட்டீசு அனுப்ப கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

பெங்களூரு:

தடுப்பு உத்தரவுகள்

மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் கடந்த பிப்ரவரி 2-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை டுவிட்டர் நிறுவனத்திற்கு ஹேஸ்டெக்குகளை தடுப்பது உள்பட 10 தடுப்பு உத்தரவுகளை பிறப்பித்து இருந்தது. இதனை எதிர்த்து டுவிட்டர் நிறுவனம் சார்பில் கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நீதிபதி கிருஷ்ணா எம். தீக்சித் முன்னிலையில் நடந்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று மனு மீதான விசாரணை நடந்தது. அப்போது டுவிட்டர் சார்பில் ஆஜரான வக்கீல் முகுல் ரோட்டகி தடுப்பு உத்தரவுகளை பிறப்பித்த காரணத்தை தெரிவிக்க மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மறுத்து விட்டதாக கூறினார். மேலும் தகவல் தொழில்நுட்ப சட்டம் 2009-ன் படி நடைமுறைகள் மற்றும் பாதுகாப்பு காரணங்களை பதிவு செய்ய வேண்டும்.

மத்திய அரசுக்கு நோட்டீசு

டுவிட்டரில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு நாங்கள் பதில் அளிக்க வேண்டும். தடுப்பு உத்தரவுகளால் எங்களது முழு வணிகம் பாதிக்கப்படும் என்று வாதிட்டார். மத்திய அரசு சார்பில் ஆஜரான வக்கீல் வழக்கு விசாரணையை வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்று கேட்டு கொண்டார். இதற்கு நீதிபதி அனுமதி அளித்தார்.

மேலும் தடுப்பு உத்தரவுகளை பிறப்பித்த காரணம் குறித்து விளக்கம் அளிக்கும்படி மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திற்கு நோட்டீசு அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார். மேலும் தடுப்பு நடவடிக்கை உத்தரவுகளை சீல் வைக்கப்பட்ட கவரில் வைக்கும்படி டுவிட்டர் நிறுவனத்திற்கு உத்தரவிட்ட நீதிபதி வழக்கு விசாரணையை அடுத்த மாதம் (ஆகஸ்டு) 12-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.


Next Story