பண்ணை வீட்டில் வனவிலங்குகள் வளர்ப்பு: முன்ஜாமீன் கோரிய காங்கிரஸ் முன்னாள் மந்திரிக்கு நோட்டீஸ்; தாவணகெரே கோர்ட்டு உத்தரவு
பண்ணை வீட்டில் வனவிலங்குகள் வளர்க்கப்பட்ட வழக்கில் முன் ஜாமீன் கோரிய காங்கிரஸ் முன்னாள் மந்திரிக்கு நோட்டீஸ் அனுப்ப தாவணகெரே கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
தாவணகெரே:
4 பேர் கைது
கர்நாடக காங்கிரஸ் மூத்த தலைவர் எஸ்.எஸ்.மல்லிகார்ஜுன். முன்னாள் மந்திரியான இவர், சாமனூர் சிவசங்கரப்பாவின் மகன் ஆவார். இவருக்கு சொந்தமாக ஆனேகொண்டா பகுதியில் பண்ணை வீடு உள்ளது. இந்த வீட்டில் எஸ்.எஸ்.மல்லிகார்ஜுன் சட்டவிராதமாக வனவிலங்குகளை வளர்த்து வருவதாக வனத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் அதிகாரிகள் பண்ணை வீட்டில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது பண்ணை வீட்டில் 10 புல்வாய் வகை மான்கள், 7 புள்ளி மான்கள், 7 காட்டுப்பன்றிகள், 3 கீரிகள் மற்றும் 2 குள்ளநரிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து பண்ணை வீட்டில் இருந்தவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் வனத்தில் இருந்து விலங்குகளை சட்டவிரோதமாக பிடித்து வந்து இனப்பெருக்கம் உள்ளிட்ட காரணங்களுக்காக வளர்த்து வந்ததும், இதற்கு வனத்துறையிடம் இருந்து எந்தவொரு முன்அனுமதியும் பெறவில்லை என்றும் தெரிந்தது. இதையடுத்து பண்ணை வீட்டின் மேலாளர் உள்பட 4 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.
முன்ஜாமீன் மனு
அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே பண்ணை வீட்டின் உரிமையாளரான முன்னாள் மந்திரி எஸ்.எஸ்.மல்லிகார்ஜுன் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் அவரை கைது செய்யவும் வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வந்தனர். இந்த நிலையில் எஸ்.எஸ்.மல்லிகார்ஜுன் சார்பில் தாவணகெரே கோர்ட்டில் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதன் மீதான விசாரணை கோர்ட்டில் நடைபெற்றது. அப்போது இதுதொடர்பான விசாரணைக்கு ஆஜராக எஸ்.எஸ்.மல்லிகார்ஜுனுக்கு நோட்டீஸ் அனுப்புமாறு அரசு வக்கீலுக்கு உத்தரவிட்டார். மேலும், முன்ஜாமீன் மனு மீதான விசாரணையை ஜனவரி 2-ந் தேதிக்கு (நாளை) நீதிபதி ஒத்திவைத்தார்.