இனி கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்


இனி கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்
x

நிவாரணம் வழங்க அரசு தவறிவிட்டதால், இளி கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என குக்கர் குண்டுவெடிப்பில் காயமடைந்த ஆட்டோ டிரைவர் வேதனையுடன் கூறினார்.

மங்களூரு:-

குக்கர் குண்டு வெடிப்பு

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே கங்கனாடி பகுதியில் சாலையில் சென்றபோது ஆட்டோவில் எடுத்து சென்ற குக்கர் வெடிகுண்டு வெடித்தது. இதில் அந்த ஆட்டோ டிரைவர் மற்றும் குக்கர் குண்டுடன் பயணித்த பயங்கரவாதி ஷாரிக் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இந்த பயங்கரவாத செயல் கர்நாடகம் மட்டுமின்றி நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து கர்நாடக போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் மங்களூரு குக்கர் குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து உபா சட்டத்தின் கீழ் விசாரிக்குமாறு கோரி தேசிய புலனாய்வு முகமையிடம் (என்.ஐ.ஏ.) கர்நாடக அரசு ஒப்படைத்துள்ளது. தற்போது அந்த வழக்கு தொடர்பாக என்.ஐ.ஏ. போலீசார் மங்களூரு கல்லூரிகளில் படித்து வந்த மாணவர் உள்பட 3 பேரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடவுள் தான்...

பயங்கரவாதி ஷாரிக்கை பெங்களூருவில் வைத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் குக்கர் குண்டுவெடிப்பில் படுகாயம் அடைந்த ஆட்டோ டிரைவர் புருஷோத்தம் பூஜாரி (வயது 61) ஆஸ்பத்திரி சிகிச்சையில் இருந்து குணமடைந்து, வீடு திரும்பினார்.

முன்னதாக அவருக்கு சொந்தமான பாழடைந்த வீட்டை தனியார் தொண்டு நிறுவனம் சீரமைத்து கொடுத்தது. இந்த நிலையில் அரசு தனக்கு நிவாரணம் ஏதும் ஏற்பாடு செய்யவில்லை எனவும், கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என்றும் புருஷோத்தம் குற்றம்சாட்டி உள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

தீக்காயம்

நான் எனது வாழ்நாளை ஆட்டோ ஓட்டி கழித்து வந்தேன். எனது மகளுக்கு அடுத்த சில மாதங்களில் திருமணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதற்கிடையே அந்த மோசமான நாள் வரும் என்று நான் நினைத்து பார்க்கவில்லை. வழக்கம் போல் பயணியை (ஷாரிக்) ஏற்றி கொண்டு சென்றேன். அப்போது

பயங்கர சத்தத்துடன் எனக்கு பின்னால் குண்டு வெடித்தது. அதில் எனக்கு தலை, கால், முகம் ஆகிய பகுதியில் தீக்காயம் ஏற்பட்டது. பயணிக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டது. அதற்கு அடுத்து என்ன நடந்தது என்பது எனக்கு தெரியவில்லை.

அரசு எனது குடும்பத்துக்கு நிவாரணம் வழங்குவதாக முன்பு கூறியது. ஆனால் இதுவரை எந்த உதவியும் கிடைக்கவில்லை. நான் இன்னும் சில நாட்கள் மருத்துவ சிகிச்சையில் இருக்க வேண்டும் என டாக்டர்கள் கூறி உள்ளனர். இதனால் எனது வாழ்வாதாரம் பாதிக்கப்படும். அரசு எங்களுக்கு செய்த சத்தியத்தை நிறைவேற்றவில்லை. இனி கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

எம்.எல்.ஏ. பேட்டி

இதற்கிடையே மங்களூரு தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வான வேதவியாஸ் காமத், நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், குக்கர் குண்டுவெடிப்பில் படுகாயம் அடைந்த ஆட்டோ டிரைவர் புருஷோத்தம் பூஜாரிக்கு, எனது சொந்த நிதியில் இருந்து ஒரு வாடகை ஆட்டோவை வழங்க உள்ளேன்.

அவரது பழைய ஆட்டோ பதிவெண் உள்ளிட்டவற்றை கொண்டு இயக்குவதற்கு வசதி செய்து கொடுக்குமாறு போக்குவரத்து அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். அடுத்த 10 நாட்களுக்குள் அரசு சார்பில் முதற்கட்டமாக ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். மேலும், அவரது மகளின் திருமண செலவுகளுக்கும் நான் ஏற்பாடு செய்வேன் என்றார்.


Next Story