ரெயிலில் ஓ.சி. பயணம்; 5 பேருக்கு தலா ஒரு மாதம் சிறை
ரெயிலில் ஓ.சி. பயணம் செய்த 5 பேருக்கு தலா ஒரு மாதம் சிறை தண்டனை விதித்து உடுப்பி கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.
மங்களூரு;
கேரளாவில் இருந்து கோவாவுக்கு செல்லும் மத்ஸ்யகந்தா ரெயில் உடுப்பி ரெயில் நிலையம் வந்தடைந்தது. அப்போது டிக்கெட் பரிசோதகர் அந்த ரெயிலில் ஏறி பயணிகளிடம் டிக்கெட்டுகளை சோதனை செய்தார்.
அப்போது ரெயிலின் ஒரு பெட்டியில் பயணித்த 5 பேர் டிக்கெட் எடுக்காமல் ஓ.சி.யில் ரெயிலில் பயணித்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுபற்றி டிக்கெட் பரிசோதகர், உடுப்பி ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் உடுப்பி ரெயில்வே போலீசார் 5 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அதில் அவர்கள், ஜுனைத் (24), சுஜித் (23), விஷ்ணு (25), யூனிஸ் (24), மிசாப் (24) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து 5 பேரும் உடுப்பி ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது நீதிபதி, டிக்கெட் எடுக்காமல் பயணித்த 5 பேருக்கும் தலா ஒரு மாதம் சிறை தண்டனை மற்றும் தலா ரூ.1,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
மேலும் அபராதத்தை செலுத்த தவறினால் மேலும் 2 மாதங்கள் சிறைத்தண்டனை நீட்டிக்கப்படும் என்றும் உத்தரவிட்டார்.