ஜனாதிபதி பதவியேற்க உள்ள திரவுபதி முர்முவுக்கு சிற்பம், ஓவியம் வடிவில் ஒடிசா கலைஞர்கள் வாழ்த்து
நாட்டின் 15-வது ஜனாதிபதியாக பதவியேற்க உள்ள திரவுபதி முர்முவுக்கு சிற்பம் மற்றும் ஓவியம் வடிவில் ஒடிசா கலைஞர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.
பூரி,
நாட்டின் 14-வது ஜனாதிபதியாக கடந்த 2017-ம் ஆண்டு ராம்நாத் கோவிந்த் பதவியேற்றார். அவரது பதவி காலம் நேற்றுடன் முடிவடைந்தது. இதற்கிடையே புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு கடந்த 18-ம் தேதி நடைபெற்றது. பா.ஜ.க. சார்பில் திரவுபதி முர்முவும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்ஹாவும் களமிறங்கினர்.
வாக்குப்பதிவு முடிவுகள் கடந்த 21-ம் தேதி அறிவிக்கப்பட்டன. அதில், திரவுபதி முர்மு வெற்றி பெற்றார் என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, நாட்டின் 15-வது ஜனாதிபதியாக திரவுபதி முர்மு இன்று பதவியேற்க இருக்கிறார். அவருக்கு பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள் மற்றும் பல்வேறு மாநிலங்களின் முதல்-மந்திரிகள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர்.
நாட்டின் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட திரவுபதி முர்முவின் டெல்லியில் உள்ள இல்லத்திற்கு ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக் நேற்று சென்றுள்ளார். அவரை சந்தித்து பேசி விட்டு வெளியே வரும்போது, செய்தியாளர்களிடம் பேசினார்.
அவர் கூறும்போது, ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட திரவுபதி முர்முவை நேரில் சந்தித்து, வாழ்த்து தெரிவிக்கவே வந்துள்ளேன். இந்தியாவின் ஜனாதிபதியாக ஒடிசாவின் மகள் தேர்ந்தெடுக்கப்பட்டதற்காக மனநிறைவும், கவுரவமும் பெற்றுள்ளேன். நாளை (திங்கட் கிழமை) நடைபெறும் அவரது பதவியேற்பு நிகழ்ச்சியில் நான் பங்கேற்பேன் என கூறினார்.
ஜார்க்கண்டின் முன்னாள் கவர்னராக பதவி வகித்தவரான முர்மு இன்று முறைப்படி நாட்டின் 15-வது ஜனாதிபதியாக பதவியேற்க உள்ளார். நாடாளுமன்ற மைய அறையில் இதற்கான நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
இதனை முன்னிட்டு ஒடிசாவில் பெரிய அளவில் கொண்டாட்டங்களில் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். அவருக்கு ஒடிசாவை சேர்ந்த பல்வேறு கலைஞர்களும் தங்களது திறமையை வெளிப்படுத்தி, அதன் வழியே வாழ்த்துகளை தெரிவித்து உள்ளனர்.
இதன்படி, ஒடிசாவின் கஞ்சம் மாவட்டத்தின் பெர்ஹாம்பூர் பகுதியை சேர்ந்த மரத்தில் சிற்பம் வடிக்கும் கலைஞரான அருண் சாகு என்பவர் திரவுபதி முர்முவின் புகைப்படம் ஒன்றை மரத்தில் செதுக்கியுள்ளார்.
இதேபகுதியை சேர்ந்த சத்யநாராயண் மகாராணா என்ற மணல் ஓவிய கலைஞர், மணலில் அனிமேஷன் முறையில் முர்முவின் உருவம் தெரியும் வகையிலான படைப்பினை வழங்கி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
ஒடிசாவின் புவனேஸ்வரை சேர்ந்த ஈஸ்வர ராவ் என்ற கலைஞர் வாழ்த்து தெரிவிக்கும் வகையில், கண்ணாடி பாட்டில் ஒன்றிற்குள் திரவுபதி முர்முவின் உருவம் தெரியும் வகையிலான படைப்பினை உருவாக்கி உள்ளார்.
இதேபோன்று, ஒடிசாவில் உள்ள புகழ்பெற்ற பூரி கடற்கரையில் திரவுபதி முர்மு உருவம் கொண்ட மணல் சிற்பம் ஒன்றை சுதர்சன் பட்னாயக் கடந்த 21ந்தேதி உருவாக்கி தன்னுடைய வாழ்த்தினை தெரிவித்து கொண்டார்.