ஒடிசா ரெயில் விபத்துக்கு காரணமானவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்படும் : காயமடைந்தவர்களை சந்தித்த பின் பிரதமர் மோடி பேட்டி
விபத்தில் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து பிரதமர் மோடி நலம் விசாரித்தார்.
சென்னை,
ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் பெங்களூரு, சென்னை ரெயில்கள் உள்பட 3 ரெயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாகின. இதுவரை வெளியாகி இருக்கும் தகவலின்படி, இந்த விபத்தில் 288 பயணிகள் உயிரிழந்துள்ளதாகவும், 900 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், விபத்து நடைபெற்ற பாலசோரில் பிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலம் வந்து இறங்கினார். பின்னர் விபத்து நடந்த பகுதிக்கு சென்று நிலைமைகளை ஆய்வு செய்தார்.
அப்போது பிரதமருடன் ரெயில்வே மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் மற்றும் மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் ஆகியோரும் உடனிருந்து, விபத்து நடந்த இடத்தில் நிலைமையை ஆய்வு செய்தார்.
தொடர்ந்து அதிகாரிகள் மற்றும் மாநில சுகாதார மந்திரியுடன் பேசிய பிரதமர் மோடி, காயமடைந்தவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படுவதை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொண்டார். மேலும், பாதிக்கப்பட்ட குடும்பங்கள் அசௌகரியத்தை எதிர்கொள்ளாமல் இருக்க சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும், பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான உதவிகள் தொடர்ந்து கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார்.
இதனை தொடர்ந்து விபத்து நடந்த பகுதியில் இருந்து ஒடிசா , பாலாசோர் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி சென்றடைந்தார். விபத்தில் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து பிரதமர் மோடி நலம் விசாரித்தார்.
பின்னர் பேட்டி அளித்த பிரதமர் மோடி கூறியதாவது ,
ரயில் விபத்தில் பலர் உயிரிழந்துள்ளது மிகுந்த வேதனை அளிக்கிறது; விபத்தால் காயமடைந்தவர்களுக்கு தேவையான சிகிச்சைகளை வழங்க அரசு உதவும் . ரயில் விபத்துக்கான காரணத்தை கண்டறிய விரிவான விசாரணை நடத்தப்படும்; தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் விபத்து நடந்த பாதையில், ரயில் போக்குவரத்தை சீர் செய்ய ரயில்வே துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்"