சொத்து தகராறில் மூதாட்டி அடித்து கொலை அண்ணன் உள்பட 3 பேர் கைது
தாவணகெரேயில் சொத்து தகராறில் மூதாட்டியை அடித்து கொலை செய்த அவரது அண்ணன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தாவணகெரே-
தாவணகெரேயில் சொத்து தகராறில் மூதாட்டியை அடித்து கொலை செய்த அவரது அண்ணன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சொத்து பிரச்சினை
தாவணகெரே மாவட்டம் சென்னகிரி தாலுகா குல்லேஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் அக்கம்மா (வயது 64). இவரது அண்ணன் பிரபாகர். இவர்கள் ஒரே கிராமத்தில் தனித்தனியாக குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள். இந்த நிலையில், பிரபாகர்-அக்கம்மா இடையே நிலத்தை பங்கீடுவது தொடர்பாக கடந்த 15 ஆண்டுகளாக பிரச்சினை இருந்து வந்தது.
இந்த சொத்து பிரச்சினையில் அவர்களுக்குள் அடிக்கடி தகராறும் ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், இந்த சொத்து பிரச்சினை தொடர்பாக கோர்ட்டிலும் வழக்கு நிலுவையில் உள்ளது.
அடித்து கொலை
இந்த நிலையில் அக்கம்மா நேற்று முன்தினம் கோர்ட்டு அனுமதியுடன் அந்தப்பகுதியில் உள்ள பிரச்சினைக்குரிய நிலத்தை அளக்க நில அளவையருடன் வந்துள்ளார். அப்போது அங்கு வந்த பிரபாகர், அவரது மகன் திலீப் மற்றும் மகள் திரிவேணி ஆகியோர் அக்கம்மாவை தடுத்துள்ளனர். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்த வாக்குவாதம் முற்றி பிரபாகர் உள்பட 3 பேரும் சேர்ந்து அக்கம்மாவை சரமாரியாக தாக்கினர். மேலும் அங்கிருந்த உருட்டுக்கட்டையை எடுத்தும் அக்கம்மாவை அவர்கள் தாக்கினர். இதில் பலத்த காயம் அடைந்த அக்கம்மா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
3 பேர் கைது
இதனால் பிரபாகர் உள்பட 3 பேரும் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து பிரபாகர், சென்னகிரி போலீஸ் நிலையத்துக்கு சென்று நடந்த சம்பவத்தை கூறி சரண் அடைந்தார். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். பின்னர் போலீசார், கொலையான அக்கம்மாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், சொத்து தகராறில் அக்கம்மாவை அவரது அண்ணன் பிரபாகர் மற்றும் பிரபாகரின் மகன் திலீப், மகள் திரிவேணி ஆகிய 3 பேரும் அடித்து கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரபாகர், திலீப், திரிவேணி ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். விசாரணைக்கு பிறகு அவர்கள் 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர். சொத்து தகராறில் தனது தங்கையை குடும்பத்துடன் சேர்ந்து அண்ணன் அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.