நாடாளுமன்றத்தில் இரவு போராட்டத்தை கைவிடுங்கள் - ஆம் ஆத்மி எம்.பி.யிடம் மல்லிகார்ஜூன கார்கே வேண்டுகோள்


நாடாளுமன்றத்தில் இரவு போராட்டத்தை கைவிடுங்கள் - ஆம் ஆத்மி எம்.பி.யிடம் மல்லிகார்ஜூன கார்கே வேண்டுகோள்
x

நாடாளுமன்றத்தில் இரவு போராட்டத்தை கைவிடுமாறு ஆம் ஆத்மி எம்.பி.யிடம் மல்லிகார்ஜூன கார்கே வேண்டுகோள் விடுத்தார்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மாநிலங்களவையில் அவை கட்டுப்பாட்டை மீறியதாக ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் இந்த மழைக்கால கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளார். இருந்தாலும், அவர் நாடாளுமன்ற வளாகத்திலேயே தங்கியிருந்து போராட்டம் நடத்தி வருகிறார். பகலில் காந்தி சிலை அருகிலும், இரவில் நாடாளுமன்ற கட்டிட நுழைவுவாயில் முன்பும் அவரது போராட்டம் தொடர்ந்து வருகிறது. அவருக்கு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தினமும் நாடாளுமன்றம் தொடங்குவதற்கு முன்பு, உடன் இருந்து ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாகாந்தியும் ஆதரவு தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் நேற்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ப.சிதம்பரம் எம்.பி. உள்ளிட்டோர் காந்தி சிலை அருகே போராட்ட இடத்துக்குச் சென்று சஞ்சய்சிங்கை சந்தித்து பேசினார்கள்.

அப்போது மல்லிகார்ஜூன கார்கே, "இரவில் போராட்டம் தேவையில்லை. பகலில் நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடங்குவதற்கு முன்பு போராட்டத்தை தொடங்கி, நாடாளுமன்ற நடவடிக்கைகள் முடியும்போது முடித்துக் கொள்ள வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.

எதிர்க்கட்சிகள் முடிவு செய்தபடி நேற்று பல எம்.பி.க்கள் கருப்பு உடை அணிந்து நாடாளுமன்றத்துக்கு வந்திருந்தனர்.

ப.சிதம்பரம் தனது இரு கைகளிலும் கருப்பு ரிப்பன் கட்டியிருந்தார்.


Next Story