வண்டியில் சென்றபோது பட்டத்தின் மாஞ்சா கயிறு கழுத்தை அறுத்ததில் மனைவி, மகள் கண்முன்னே துடிதுடித்து பலியான நபர்!
டெல்லியில் ரக்சா பந்தன் விழாவை கொண்டாட தனது சகோதரியைச் சந்திக்கச் சென்ற நபரின் கழுத்தில் காத்தாடி கம்பி பட்டு கழுத்தை அறுத்ததில் பரிதாபமாக உயிரிழந்தார்.
புதுடெல்லி,
டெல்லியில் ரக்சா பந்தன் விழாவை கொண்டாட தனது சகோதரியைச் சந்திக்கச் சென்ற நபரின் கழுத்தில் காத்தாடி கம்பி பட்டு கழுத்தை அறுத்ததில் பரிதாபமாக உயிரிழந்தார்.
சமீப காலமாக டெல்லியில் சீன மாஞ்சா கயிறு என்று பொதுவாகக் குறிப்பிடப்படும் காத்தாடி சரத்தால் பல மரணங்கள் நிகழ்ந்துள்ளன. கண்ணுக்கு தெரியாத கூர்மையான இந்த கயிறுகள் மனித உடல் தோலை வெட்டி கிழித்துக்கொண்டு, உடலை பதம்பார்ப்பது தொடர்கதையாகிவிட்டது.
இந்த நிலையில், சம்பவத்தன்று விபின்குமார் என்ற அந்த நபர், தனது மனைவி மற்றும் மகளுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். சாஸ்திரி பார்க் பகுதியை கடந்து அவர் செல்லும் போது, அவரது கழுத்தில் பட்டத்தின் சரம் சிக்கி ரத்தம் வழிந்தது.
உடனே அவர் தனது கைகளால் பட்டத்தின் கயிறுகளை எடுக்க முற்பட்டுள்ளார். ஆனால் கூர்மையான அந்த கயிறுகள் அவரது கைகளிலும் காயத்தை ஏற்படுத்தின.
பின் அவர் வண்டியை நிறுத்திவிட்டு சாலையில் மயக்கமடைந்து கீழே விழுந்தார். அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து அவரது தலையில் இருந்த தலைக்கவசத்தை கழற்றினர். அப்போது ரத்தம் பீறிட்டு வரத் தொடங்கியது.
உடனே அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக கூறினர்.
விடுமுறை தினத்தன்று பண்டிகை கொண்டாட சென்ற நபர், தன் மனைவி, மகள் கண் முன்னே துடிதுடித்து பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வழக்கில், கொலை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.