'ஹர் கர் திரங்கா' நிகழ்ச்சி மூலம் கர்நாடகத்தில் ஒரு கோடி தேசிய கொடி ஏற்ற முடிவு; உள்துறை மந்திரி அமித்ஷா நடத்திய கூட்டத்தில் பசவராஜ் பொம்மை தகவல்
‘ஹர் கர் திரங்கா' நிகழ்ச்சி மூலம் கர்நாடகத்தில் ஒரு கோடி தேசிய கொடி ஏற்றப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.
பெங்களூரு:
ஒரு கோடி தேசிய கொடி
உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று டெல்லியில் இருந்தபடி கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை மற்றும் உயர் அதிகாரிகளுடன் சுதந்திர தின பவள விழாவையொட்டி வீடுகள் மீது தேசிய கொடியை ஏற்றுவது தொடர்பாக 'ஹர் கர் திரங்கா' குறித்து ஆலோசனை நடத்தினார். இதில் பசவராஜ் பொம்மை பேசியதாவது:-
சுதந்திர தின பவள விழாவையொட்டி அரசு, அரசு சாரா அமைப்புகள் மற்றும் பள்ளி-கல்லூரிகளில் இந்த திட்டத்தை வெற்றிகரமாக அமல்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தலைமை செயலாளர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட கலெக்டர்களும் இதுகுறித்து ஆலோசனை நடத்தி இருக்கிறார்கள். நகரங்கள் மற்றும் கிராமங்களில் அரசு கட்டிடங்கள், பள்ளி-கல்லூரிகளில் தேசிய கொடி பறக்க விடப்படும். கர்நாடகத்தில் ஒரு கோடி தேசிய கொடியை பறக்கவிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
மகளிர் சுயஉதவி குழுக்கள்
தார்வாரில் தேசிய கொடி உற்பத்தி செய்யும் நிறுவனம் மற்றும் மகளிர் சுயஉதவி குழுக்களிடம் இருந்து 50 லட்சம் தேசிய கொடிகள் வாங்கப்படுகின்றன. மீதமுள்ள 50 லட்சம் கொடியை வினியோகம் செய்யுமாறு மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கொடி நமது உணர்வு பூர்வமான விஷயம். தேசபக்தியை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளை அரசு மேற்கொண்டு வருகிறது.
இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.
உள்துறை மந்திரி அமித்ஷா பேசும்போது, 'வருகிற ஆகஸ்டு 13-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை நாடு முழுவதும் 20 கோடி தேசிய கொடியை ஏற்ற திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு தேவையான ஏற்பாடுகளை கர்நாடக அரசு மேற்கொள்ள வேண்டும். இந்த 'ஹர் கர் திரங்கா' நிகழ்ச்சியை வெற்றி பெற செய்ய மத்திய-மாநில அரசுகள் மட்டுமின்றி பொதுமக்களும் கைகோர்க்க வேண்டும். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் இத்தகைய நிகழ்ச்சியை சிறப்பாக நடத்துவதே பெரிய சாதனை ஆகும்' என்றார்.
மந்திரி சுனில்குமார்
இந்த நிகழ்ச்சியில் மின்சாரம் மற்றும் கன்னட கலாசாரத்துறை மந்திரி சுனில்குமார், தலைமை செயலாளர் வந்திதா சர்மா, போலீஸ்துறை கூடுதல் தலைமை செயலாளர் ரஜனீஸ் கோயல், நகர வளர்ச்சித்துறை கூடுதல் தலைமை செயலாளர் ராகேஷ்சிங், முதல்-மந்திரியின் முதன்மை செயலாளர் மஞ்சுநாத் பிரசாத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.