விபத்தில் சிறுவன் பலியான வழக்கில் மோட்டார் சைக்கிள் வழங்கிய உறவினருக்கு ஒருநாள் சிறை தண்டனை; ராமநகர் கோர்ட்டு தீர்ப்பு
விபத்தில் சிறுவன் பலியான வழக்கில் மோட்டார் சைக்கிள் வழங்கிய உறவினருக்கு ஒருநாள் சிறை தண்டனை மற்றும் ரூ.34 ஆயிரம் அபராதம் விதித்து ராமநகர் கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது.
பெங்களூரு:
விபத்தில் சிறுவன் சாவு
ராமநகர் மாவட்டம் சென்னபட்டணா அருகே வசித்து வருபவர் அன்வர்கான். இவரது உறவினர் மகனுக்கு 18 வயது நிரம்பவில்லை. கடந்த 4 மாதங்களுக்கு முன்பு அந்த சிறுவனுக்கு அன்வர்கான் மோட்டார் சைக்கிளை கொடுத்திருந்தார். அந்த மேட்டார் சைக்கிளை ஓட்டி சென்ற சிறுவன், சென்னபட்டணாவில் உள்ள கே.எஸ்.ஆர்.டி.சி. பணிமனை அருகே சாலையோர தடுப்பு சுவரில் மோதி விபத்தை ஏற்படுத்தி இருந்தான்.
இந்த விபத்தில் தலையில் பலத்தகாயம் அடைந்திருந்த சிறுவன், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பலியாகி இருந்தான். 18 வயது நிரம்பாத சிறுவனிடம் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் இருந்தாலும், அந்த சிறுவனை மோட்டார் சைக்கிள் ஓட்டுவதற்கு அனுமதித்து தனது மோட்டார் சைக்கிளை அன்வர்கான் வழங்கி இருந்ததால், அவர் மீது சென்னபட்டணா போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது.
உறவினருக்கு சிறை தண்டனை
இந்த வழக்கு தொடர்பான விசாரணை சென்னபட்டணா கோர்ட்டில் நடைபெற்று வந்தது. சென்னபட்டணா போலீசார் கோர்ட்டில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை நீதிபதி மகேந்திரகுமார் முன்னிலையில் நடைபெற்றது. வழக்கு விசாரணை நிறைவு பெற்ற நிலையில் நீதிபதி மகேந்திரகுமார் தீர்ப்பு கூறினார்.
அப்போது சிறுவனுக்கு மோட்டார் சைக்கிளை ஓட்டுவதற்கு வழங்கியது சட்டப்படி குற்றமாகும். அன்வாகான் மோட்டார் சைக்கிளை வழங்கியதால் தான், அதனை ஓட்டிச் சென்ற சிறுவன் விபத்தில் சிக்கி பலியாகி உள்ளான். சிறுவனின் மரணத்திற்கு காரணமான அன்வர்கானுக்கு ஒரு நாள் சிறை தண்டனையும், ரூ.34 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுவதாக நீதிபதி உத்தரவிட்டுள்ளார். சிறுவர்களுக்கு மோட்டார் சைக்கிளை வழங்குபவர்களுக்கு இந்த தீர்ப்பு ஒரு எச்சரிக்கை ஆகும்.