கிராமப்புறங்களில் வீடுகளுக்கு 'நொடிக்கு ஒரு குழாய் இணைப்பு' - மத்திய அரசு
கிராமப்புறங்களில் வீடுகளுக்கு நொடிக்கு ஒரு குழாய் இணைப்பு கொடுக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
மத்திய ஜலசக்தி துறை மந்திரி கஜேந்திரசிங் ஷெகாவத் டுவிட்டரில் வெளியிட்ட செய்தியில், 'பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வையில் உருவான ஜலஜீவன் திட்டம் கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 15-ந் தேதி தொடங்கிவைக்கப்பட்டது. கிராமப்புறங்களில் உள்ள வீடுகளுக்கு சுத்தமான, பாதுகாக்கப்பட்ட குடிநீரை குழாய்கள் மூலம் நேரடியாக வழங்குவதே இந்த திட்டத்தின் நோக்கம் ஆகும். இது உலகின் மிகப்பெரிய நலத்திட்டங்களில் ஒன்றாகும்.
நாடு முழுவதும் மொத்தம் 19.43 கோடி கிராமப்புற வீடுகள் உள்ளன. இந்த திட்டம் தொடங்கும்போது வெறும் 3.23 கோடி வீடுகளில் மட்டுமே குழாய்நீர் இணைப்பு இருந்தது. தற்போது 11.66 கோடி வீடுகளுக்கு இணைப்பு கொடுக்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் இந்த திட்டம் 60 சதவீதம் நிறைவேறி உள்ளது' என பெருமிதம் தெரிவித்துள்ளார்.
கடந்த 3 மாதங்களாக 'நொடிக்கு ஒரு இணைப்பு' என்கிற வகையில் கிராமப்புறங்களில் வீடுகளுக்கு குழாய்நீர் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது ஒரு நாளைக்கு சராசரியாக 86 ஆயிரத்து 894 புதிய இணைப்புகள் கொடுக்கப்பட்டு உள்ளன. இது குறிப்பிடத்தக்க சாதனை என ஜலசக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாட்டில் குஜராத், தெலுங்கானா, அரியானா, பஞ்சாப் மற்றும் கோவா ஆகிய மாநிலங்களும், அந்தமான், டாமன்-டையு மற்றும் புதுச்சேரி ஆகிய யூனியன் பிரதேசங்களும் 100 சதவீதம் குழாய் இணைப்பை கொடுத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.