பெங்களூரு-மைசூரு விரைவுச்சாலை விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் ஆதாயம் தேட முயற்சி; பசவராஜ் பொம்மை குற்றச்சாட்டு
பெங்களூரு-மைசூரு விரைவுச்சாலை விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் ஆதாயம் தேட முயற்சிப்பதாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை குற்றம்சாட்டி உள்ளார்.
பெங்களூரு:
பெங்களூரு-மைசூரு விரைவுச்சாலை
பெங்களூரு-மைசூரு இடையே விரைவுச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த விரைவுச்சாலையை நேற்று பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். பெங்களூரு-மைசூரு விரைவுச்சாலை அமைய தேவேகவுடா தான் காரணம் என்று ஜனதாதளம் (எஸ்) கட்சியும், முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமியும் கூறி வருகிறார்கள்.
அதுபோல, தங்களது ஆட்சியில் தான் பெங்களூரு-மைசூரு விரைவுச்சாலை அமைக்கும் பணிகள் நடந்ததாக காங்கிரஸ் தலைவர்கள் கூறி வருவதுடன், எங்கள் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டத்தை பா.ஜனதா ஆட்சியில் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து வருகின்றனர். இந்த விவகாரம் குறித்து பெங்களூருவில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-
ஆதாயம் தேட முயற்சி
பெங்களூரு-மைசூரு விரைவுச்சாலையை அமைத்தது யார்? என்பது குறித்து எதிர்க்கட்சி தலைவர்கள் பலவிதமாக பேசி வருகிறார்கள். தேவையில்லாமல் மக்களிடம் குழப்பத்தை உருவாக்கும் முயற்சிகளும் நடக்கிறது. இந்த சாலையை அமைத்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் ஆதாயம் தேட முயற்சி செய்கிறது.
உண்மையில் பெங்களூரு-மைசூரு சாலை அமைத்தது யார்? என்பது மக்களுக்கு தெரியும். இந்த விவகாரத்தில் மக்களே முடிவு செய்வார்கள். பா.ஜனதா ஆட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை சகித்து கொள்ள முடியாமல் எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகள் கூறுவது வாடிக்கையானது தான்.
இவ்வாறு அவர் கூறினார்.