சுரங்க சாலைகளை ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
பெங்களூருவில் சுரங்க சாலைகளை ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:-
எஸ்.எம்.கிருஷ்ணாவிடம் ஆசி
கர்நாடக துணை முதல்-மந்திரியாக டி.கே.சிவக்குமார் பதவி ஏற்றுள்ளார். இதையடுத்து, பெங்களூரு சதாசிவநகரில் உள்ள முன்னாள் முதல்-மந்திரி எஸ்.எம். கிருஷ்ணாவின் வீட்டுக்கு நேற்று காலையில் டி.கே.சிவக்குமார் சென்றார். பின்னர் பூங்கொத்து கொடுத்து எஸ்.எம்.கிருஷ்ணாவிடம் அவர் ஆசிர்வாதம் பெற்றார். பின்னர் சிறிது நேரம் எஸ்.எம்.கிருஷ்ணாவிடம் பேசி விட்டு டி.கே.சிவக்குமார் வெளியே வந்தார்.
எஸ்.எம்.கிருஷ்ணாவின் பேரனை தான், டி.கே.சிவக்குமாரின் மகள் திருமணம் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
ஒரே நாளில் சாத்தியமில்லை
என்னுடைய அரசின் வாழ்க்கையின் வழிகாட்டியாக விளங்கியவர் எஸ்.எம்.கிருஷ்ணா. அதனால் அவரை சந்தித்து ஆசிர்வாதம் பெற்றேன். இது எனது கடமையாகும். எஸ்.எம்.கிருஷ்ணாவின் ஆசிர்வாதம், வழிகாட்டுதலின்படியே நான் வந்துள்ளேன். அவர், பெங்களூருவின் வரலாறு என்ற புத்தகத்தை என்னிடம் கொடுத்தார்.
பெங்களூருவில் மழை பாதித்த பகுதிகளை நேற்று இரவு (நேற்று முன்தினம்) சென்று பார்வையிட்டேன். கே.ஆர்.சர்க்கிளில் கார்
தண்ணீரில் மூழ்கி பெண் என்ஜினீயர் பலியான இடத்தை பார்வையிட்டதுடன், அவரது உயிர் இழப்புக்கான காரணம் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டு அறிந்து கொண்டேன். காங்கிரஸ் அரசு அமைந்தே ஒரு நாளிலேயே அனைத்து பிரச்சினைகளையும் சரி செய்து விடுவது சாத்தியமில்லை.
பாதுகாப்பு குறித்து ஆய்வு
பெங்களூருவில் பெய்த மழைக்கு சாக்கடை கால்வாயில் அடித்து செல்லப்பட்டு லோகேஷ் என்ற வாலிபரும் பலியாகி இருக்கிறார். மழை நேரத்தில் சாக்கடை கால்வாய் அருகே நடந்து செல்லும் போது கவனமாக
இருக்க வேண்டும். சுரங்க சாலையில் தேங்கி கிடந்த தண்ணீரில் கார் சிக்கி பெண் என்ஜினீயர் பலியாகிஇருப்பதால், முன் எச்சரிக்கையாக நகரில் உள்ள அனைத்து சுரங்க சாலைகளின் பாதுகாப்பு குறித்து ஆய்வு நடத்தி அறிக்கை அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.
சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் மத்திய அரசு பெங்களூருஉள்பட பல்வேறு நகரங்களை சீர்மிகு நகரமாக மாற்றுவதற்கு தேவையான நடவடிக்கை எடுத்து, நிதி ஒதுக்கி இருந்தது. கடந்த ஆட்சியை போன்று தற்போதும் மத்திய அரசு சீர்மிகு நகர திட்டத்திற்கு தேவையான நிதியை ஒதுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.