விபத்தில் மூளைசாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்


விபத்தில் மூளைசாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்
x
தினத்தந்தி 1 March 2023 12:15 AM IST (Updated: 1 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பைந்தூர் அருகே விபத்தில் மூளைசாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. இதன் மூலம் 6 பேர் பயனடைந்தனர்.

மங்களூரு:-

சாலை விபத்து

உடுப்பி மாவட்டம் பைந்தூர் தாலுகாவை அடுத்த உப்புந்தாவை சேர்ந்தவர் பிரசன்ன குமார். இவரது மனைவி கோடேரி ஷில்பா மாதவ் (வயது 44). கடந்த 25-ந் தேதி இவர் மோட்டார் சைக்கிளில் சென்றபோது பைந்தூர் அருகே விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் கோடேரி ஷில்பாவிற்கு பலத்த காயம் ஏற்பட்டது. உறவினர்கள் அவரை மீட்டு மணிப்பால் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஆனால் கடந்த 27-ந் தேதி அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து குடும்பத்தினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அப்போது அவரது கணவன் பிரசன்ன குமார், மனைவியின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்தார். அதன்படி கோடேரி ஷில்பா மாதவின் கல்லீரல், சிறுநீரகம், கண் ஆகிய உடல் உறுப்புகளை தானம் செய்வதாக அவர் கூறினார்.

உடல் உறுப்பு தானம்

இதையடுத்து நேற்று முன்தினம் மணிப்பால் ஆஸ்பத்திரி டாக்டர் குழுவினர், கல்லீரல், சிறுநீரகம், கண் ஆகியவற்றை அறுவை சிகிச்சை செய்து எடுத்தனர். பின்னர் அந்த உடல் உறுப்புகளில் சிலவற்றை பெங்களூருவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கும், சில உறுப்புகள் மங்களூருவில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்காக போலீசார் சிறப்பு போக்குவரத்து வசதி செய்து கொடுத்திருந்தனர்.

இதனால் குறிப்பிட்ட நேரத்திற்குள் உடல் உறுப்புகள் ஆஸ்பத்திரியை சென்றடைந்தது. நேற்று இந்த உடல் உறுப்புகள் அனைத்தும், சம்பந்தப்பட்டவர்களுக்கு பொறுத்தப்பட்டது. இதன் மூலம் 6 பேர் பயனடைந்ததாக கூறப்படுகிறது.

இறந்து வாழ்கிறார்

இது குறித்து நிருபர்களுக்கு பேட்டியளித்த கோடேரி ஷில்பா மாதவின் கணவர் பிரசன்ன குமார் கூறியதாவது:-

என் மனைவி மறைந்தாலும், அவரது உடல் உறுப்புகள் இன்னும் உயிருடன் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதனால் என் மனைவி உயிருடன் இருப்பதாகவே உணருகிறேன். இறந்தாலும், அவர் பிறருக்கு ஒளியாக விளங்கியுள்ளார். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story