ராகுல்காந்திக்கு மக்கள் ஆதரவு பெருகுவதை கண்டு பாஜக பயந்து விட்டது - அசோக் கெலாட்


ராகுல்காந்திக்கு மக்கள் ஆதரவு பெருகுவதை கண்டு பாஜக பயந்து விட்டது  - அசோக் கெலாட்
x
தினத்தந்தி 21 Dec 2022 4:38 PM IST (Updated: 21 Dec 2022 4:41 PM IST)
t-max-icont-min-icon

இந்திய ஒற்றுமை யாத்திரையை சீர்குலைக்கவே மத்திய மந்திரி கடிதம் எழுதி உள்ளதாக ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட் குற்றம்சாட்டி உள்ளார்.

ஜெய்ப்பூர்,

நாட்டின் ஒற்றுமையை வலியுறுத்தி காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி முதல் இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வருகிறார். கன்னியாகுமரியில் நடைபயணத்தை தொடங்கிய ராகுல் காந்தி, தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களைக் கடந்து தற்போது ராஜஸ்தானில் பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார்.

இத்தகைய சூழலில் சீனா மற்றும் கிழக்கு ஆசியாவில் கோவிட் தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் பரிசோதனைகளை தீவிரப்படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா நேற்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மற்றும் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் ஆகியோருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில்,

இந்திய ஒற்றுமை நடைபயணத்தின்போது கோவிட் வழிகாட்டுதல்களை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும், முகமூடி, சானிடைசர் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், தடுப்பூசி போடப்பட்டவர்கள் மட்டுமே இந்திய ஒற்றுமை நடைபயணத்தில் பங்கேற்க வேண்டும் என்றும், கோவிட் நெறிமுறையைப் பின்பற்றுவது சாத்தியமில்லை என்றால், பொது சுகாதார அவசர நிலையைக் கருத்தில் கொண்டு, தேசிய நலன் கருதி இந்திய ஒற்றுமை நடைபயணத்தை ஒத்திவைக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் இது குறித்து ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

ராகுல்காந்தியின் ஒற்றுமை யாத்திரைக்கு மக்கள் ஆதரவு பெருகுவதை கண்டு பாஜக பயந்துவிட்டது. இந்த யாத்திரையில் லட்சக்கணக்கானோர் கலந்து கொள்கின்றனர். மத்திய மந்திரிகள் இப்படி கடிதம் எழுதுவதால் மத்திய அரசு மிகவும் பயந்து விட்டது. எங்கள் யாத்திரை நடந்து கொண்டிருக்கிறது, மேலும் தொடரும்.ஒற்றுமை யாத்திரையை சீர்குலைக்கவே மத்திய மந்திரி கடிதம் எழுதி உள்ளார். நாட்டில் பாரத் ஜோடோ யாத்ராவின் தாக்கம் உள்ளது. பாஜகவே மிகவும் கலக்கத்தில் உள்ளது. சில நாட்களுக்கு முன்பு ஜேபி நட்டாவின் ஆக்ரோஷ் பேரணி கடுமையான தோல்வியடைந்தது "திரிபுராவில் பிரதமர் நடத்திய பேரணியில் கொரோனா நடைமுறைகள் பின்பற்றவில்லை என்றார்.


Next Story