அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணி 40 சதவீதம் நிறைவு! அடுத்த ஆண்டு டிசம்பர் முதல் சாமி தரிசனம் செய்யலாம்
அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணி 40 சதவீதம் நிறைவடைந்துவிட்டதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணி 40 சதவீதம் முடிந்துவிட்டதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான "பூமிபூஜை" ஆகஸ்ட் 5, 2020 அன்று பிரதமர் மோடியால் மேற்கொள்ளப்பட்டது. அதன்பின், கடந்த இரண்டு ஆண்டுகளில் 40 சதவீதத்துக்கும் மேற்பட்ட பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.
"கோயில் கட்டுமானப் பணிகள் 40 சதவீதத்துக்கும் மேல் நிறைவடைந்துள்ளன. 80 சதவீதத்துக்கும் அதிகமான பீடத்தின் கட்டுமான பணிகள் முடிந்துள்ளன. உலகம் முழுவதிலுமிருந்து வரும் பக்தர்கள் டிசம்பர் 2023 முதல் கோவிலில் சாமி தரிசனம் செய்யலாம்" என கட்டுமான பணியை மேற்பார்வையிடும் ஸ்ரீ ராம் ஜென்மபூமி டிரஸ்ட் பொதுச் செயலாளர், சம்பத் ராய் தெரிவித்தார்.
இந்நிலையில், ராமர் கோவில் கட்டுமானத்தில் பயன்படுத்தப்பட்ட பணம் மற்றும் செலவுகள் குறித்து கேட்டதற்கு, சம்பத் ராய் கூறியதாவது, "கடவுளுக்காக செய்யும் பணியில் பணத்திற்கு பஞ்சம் இருக்க முடியாது" என்றார்.
கோயிலைச் சுற்றியுள்ள சாலைகளை மேம்படுத்துவதற்கான கட்டுமானப் பணிகள் மற்றும் இடிப்புப் பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. பிரசித்தி பெற்ற அனுமன்கர்ஹி கோயிலுக்கு செல்லும் சாலையை விரிவுபடுத்துவதற்காக கடைகள் மற்றும் வீடுகளை இடிக்கும் பணியும் நடந்து வருகிறது.
அறநிலையத்துறை அதிகாரிகளின் கூற்றுப்படி, கோவில் கட்டிடம் குறைந்தது ஆயிரம் ஆண்டுகள் நிலைத்திருக்க பூமிக்கடியில் மிகப்பெரிய அடித்தளம் அமைக்கப்படுகிறது.
தற்போது கோவிலில் பட்டறையில், ஆண்களும் பெண்களும் உட்பட பல தொழிலாளர்கள் கற்களை செதுக்கி மெருகூட்டுவதைக் காண முடிகிறது. அயோத்தி வருவ்ம் பக்தர்கள் அங்கு சென்று கட்டுமான பணிகளை பார்வையிட்டு செல்கின்றனர்.